ஹோசன்காபாத்
மத்தியப் பிரதேசம், ஹோசன்காபாத் நகரில் இன்று காலை நடந்த கார் விபத்தில் தயான்சந்த் கோப்பை ஹாக்கி போட்டிக்குச் சென்ற தேசிய ஹாக்கி வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஹோசன்காபாத் நகர போலீஸ் ஆய்வாளர் ஆஷிஸ் பவார் கூறியதாவது:
''ஹோசன்காபாத் நகர் அருகே 12 கி.மீ. தொலைவில் உள்ள ராய்சல்பூர் கிராமம் அருகே இன்று காலை 7 மணிக்கு ஒரு சொகுசுக் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகத் தகவல் கிடைத்தது.
உடனடியாக விபத்து நடந்த இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டோம். இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் விபத்தில் சிக்கியவர்கள் குறித்த விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதன்பின் விசாரணையில் இந்த காரில் வந்தவர்கள் அனைவரும் தேசிய ஹாக்கி அணி வீரர்கள் என்பது தெரியவந்தது.
காயமடைந்த வீரர்களிடம் விசாரணை நடத்தியதில், எதிரே வந்த காரை முந்திச் செல்ல முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதியதாகத் தெரிவித்தனர். காரில் இருந்த 7 வீரர்களும் போபாலில் நடக்கும் தயான்சந்த் ஹாக்கி கோப்பை போட்டியில் பங்கேற்கச் சென்றபோது விபத்து நடந்ததாகத் தெரிவித்தார்கள்.
இட்டார்சியில் ஒரு நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாடிவி்ட்டு ஹோசன்காபாத் நகரம் நோக்கி வந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் பலியான வீரர்கள் இந்தூரைச் சேர்ந்த ஷாநவாஸ் ஹூசைன், இட்டார்சியைச் சேர்ந்த ஆதர்ஷ் ஹர்துவா, ஜபல்பூரைச் சேர்ந்த ஆஷ்ஸ் லால், குவாலியரைச் சேர்ந்த அனிகேத் வருண் ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்கள் அனைவருக்கும் 18 முதல் 22 வயது வரை இருக்கும். தேசிய அணியில் அனைவரும் இடம் பெற்றுள்ளார்கள்.
இட்டார்சியைச் சேர்ந்த ஷான் கிளாட்வின், சாஹில் சோரே, குவாலியரைச் சேர்ந்த அக்சே அவாஸ்தி ஆகியோர் காயமடைந்தவர்கள். இவர்கள் அனைவரும் போபாலில் உள்ள மத்தியப் பிரதேச ஹாக்கி அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்கள்''.
இவ்வாறு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து அறிந்த முதல்வர் கமல்நாத் பலியான ஹாக்கி வீரர்களின் மறைவுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பலியான வீரர்களின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளைச் செய்யவும், காயமடைந்தவீரர்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
பிடிஐ