தானே
மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தாமரை பட்டனை அழுத்துவது பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவது போன்றது என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் வரும் 21-ம் தேதி தேர்தலும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
மும்பையின் தானே தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவை ஆதரித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''ஹரியாணா, மகாராஷ்டிராவின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பின் நடக்கும் தேர்தல் என்பதால், அதிகமாகக் கவனிக்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் மக்கள் வாக்கு எந்திரத்தில் தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்துவது என்பது, பிரதமர் மோடி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், நரேந்திர மேத்தா ஆகியோருக்கு மட்டும் நல்லது செய்வது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீது தானாகவே அணுகுண்டு வீசுவதற்கு ஒப்பானதாகும்.
இந்தியர்களின் உண்மையான தேசபக்தி இந்தத் தேர்தலில் தெரியும் என்பதால், ஒட்டுமொத்த உலகமும் இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்றன.
ஒவ்வொரு வேட்பாளரும் தங்களுக்கு உரிய சரியான வேட்பாளரைத் தேர்வு செய்வது அவசியம். உங்கள் வாக்கு நரேந்திர மேத்தாவுக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடியின் தலைமைக்கும், பட்நாவிஸ் தலைமைக்கும் செல்லும்.
கடவுள் லட்சுமி, யாருடைய கைகளிலும் (காங்கிரஸ் சின்னம்) அமரவில்லை, சைக்கிளில் (சமாஜ்வாதி) அமரவில்லை, கடிகாரத்திலும் அமரவில்லை. கடவுள் லட்சுமி தாமரை மலரில்தான் அமர்ந்துள்ளார். தாமரை சின்னம்தான் வளர்ச்சியின் அடையாளம்.
பாஜகவின் அனுதாபிகளிடம் இருந்து ஒரு வாக்கைக் கூட, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பிரித்துச் சென்றுவிட முடியாது, அவர்களின் வாக்குகளை வாங்கவும் முடியாது''.
இவ்வாறு மவுரியா தெரிவித்தார்.
பிடிஐ