காங்கிரஸ் கட்சியை யாராலும் அழிக்க முடியாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் முக்கிய மான மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற முயலும்போதெல்லாம் இருஅவை களையும் முடக்குவதை பாஜக வாடிக்கையாகக் கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் நாள்தோறும் அவையில் அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இப்போது மக்களவைத் தேர்தலையொட்டி “காங்கிரஸ் இல்லாத நாடு” என்ற பெயரில் எதிர்க்கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. அந்தக் கட்சி காங்கிரஸின் வரலாற்றை படிக்கவில்லை என்றே கருதுகிறேன்.
காங்கிரஸ் கட்சி என்பது ஒற்றுமையை வலியுறுத்தும் சித்தாந்தம். அந்த சித்தாந்தம் மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. மக்களின் மனதில் இருந்து அதனை யாராலும் அழிக்க முடியாது.
சர்வாதிகாரிகளின் ஆட்சி, ஒரு தனிநபரின் ஆட்சி போன்றவை ஜனநாயகம் ஆகாது. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புகளையும் ஒரு தனிநபரின் (நரேந்திர மோடி) கையில் சிக்கவிடமாட்டோம்.
பாரதிய ஜனதா கட்சி மக்களிடையே மதவாதத் தீயை மூட்டி சகோதரருக்கு எதிராக சகோதரரை சண்டையிடச் செய்கிறது. இந்த சமூக சீர்கேட்டையும் சகித்துக் கொள்ள மாட்டோம்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பர்
இதுவரை இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வந்தனர். இந்த முறை கிராமப்புற மக்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், பெண்கள், இளைஞர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்பட அனைவரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும்.
பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு காங்கிரஸின் அனைத்து அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களில் 50 சதவீதம் பேர் பெண்களாக இருப்பர். அடுத்த 3 மாதங்களில் ஊழல் எதிர்ப்பு தொடர்பான 6 முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்
காங்கிரஸ் ஒரு ஜனநாயகக் கட்சி. அதன்படி கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனநாயகரீதியில் மட்டுமே இருக்கும். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். அதன்பின் கட்சி எம்.பி.க்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்.
தேர்தல் நேரத்தில் கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு இந்தமுறை வாய்ப்பு அளிக்கப்படாது. அதற்காக அவர்களுக்கு கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டதாக அர்த்தம் இல்லை.
மக்கள் கையில் அதிகாரம்
ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய திட்டம் ஆதார் அடையாள அட்டை திட்டம். இதன்மூலம் உங்கள் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மக்களின் கையில் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று யாரும் கோரவில்லை.
மத்திய அரசுகூட விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்று தெரிந்திருந்தும் நாங்கள் சட்டத்தைக் கொண்டுவந்தோம். இதுபோல் காங்கிரஸின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இவை தவிர ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார். இந்த கூட்டத்தின் மூலம் மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளோம்.
வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாட்டுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். சாமானிய மக்கள், தொழிலாளிகளின் வாழ்க்கையில் காங்கிரஸ் ஒளியேற்றும்.
நான் கட்சியின் படைவீரன். கட்சி எனக்கு என்ன உத்தரவிடுகிறதோ, அதை செய்வதற்கு தயாராக உள்ளேன் என்றார் ராகுல் காந்தி.