புதுடெல்லி
சென்னை வந்திருந்த பிரதமர் மோடி கோவளம் கடற்கரையில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது கையில் வைத்திருந்த பொருள் என்ன என்று மக்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 2-வது முறை சாரா சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது.
இந்த சந்திப்புக்காக பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையே சென்னை வந்து கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.
இதில் நேற்று காலை கோவளம் கடற்கரையில் பிரதமர் மோடி உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது கடற்கரைப் பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை கையுறை இன்றி, காலில் செருப்பின்றி சேகரித்து சுற்றுப்புறச்சூழல் சுத்தத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வுகளின்போது பிரதமர் மோடி கையில் ஒருவகையான சின்ன கைத்தடி போன்ற பொருளை வைத்திருந்தார். அதன் கைப்பிடியில் முட்கள் போன்ற அமைப்பு இருந்தது. இதை பிரதமர் மோடி கையில் வைத்து உருட்டிக்கொண்டு இருந்தார்.
பிரதமர் மோடியின் கையில் இருந்த பொருள் என்னவென்று அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வம் அதிகமாகியது. அந்த பொருள் குறித்து பிரதமர் மோடியின் ட்விட்டரில் பலர் கேள்வி எழுப்பினார்கள்.
மக்களின் கேள்விக்கு பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதில் அளித்துள்ளார்.
அதில் " மாமல்லபுரம் கடற்கரையில் நான் நடைபயிற்சி செய்து பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்தபோது, என் கைகளில் இருந்த பொருள் என்ன என்று பலரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள்.
ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார்கள். நான் கையில் வைத்திருந்த பொருளின் பெயர் 'அக்குபிரஷர் ரோலர்' அதை நான் அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இது எனக்கு பலவகையில் உதவியுள்ளதை கண்டுபிடித்துள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்
மேலும், அக்குபிரஷர் கருவியை பயன்படுத்துவது போன்ற புகைப்படங்களையும் மோடி வெளியிட்டுள்ளார்.