கொல்கத்தா
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் பட்டதாரி காமினி ராய்க்கு, அவரது 155-வது பிறந்த நாளில் கூகுள் தேடுபொறி இன்று டூடுல் வெளியிட்டு கவுரவம் அளித்துள்ளது.
வங்க மொழிக் கவிஞரும் சீர்திருத்தவாதியுமான காமினி ராய் பெண்களுக்கான வாக்குரிமைக்கான போராட்டத்தின் முன்னணி பிரச்சாரகராக இருந்தார். பிரிட்டிஷ் இந்தியாவில் பள்ளிக்குச் சென்ற முதல் சிறுமிகளில் ஒருவரான ராய், அக்டோபர் 12, 1864 அன்று பிரிக்கப்படாத வங்காளத்தின் பேக்கர்குஞ்ச் மாவட்டத்தில் உள்ள பசண்டா கிராமத்தில் பிறந்தார். இப்பகுதி இன்றைய வங்கதேசத்தின் பாரிசல் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அவர் ஓர் உயரடுக்கு பெங்காலி பிரம்ம சமாஜ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை சாண்டி சரண் சென், நீதிபதியாகவும் எழுத்தாளருமாக இருந்ததால் இயல்பாகவே அவருக்கு வாசிப்புப் பழக்கம் உருவானது. அதுமட்டுமின்றி எதையும் ஆய்ந்தறிந்து தர்க்கரீதியான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும் முடிந்தது.
முதல் இந்தியர்
1886 ஆம் ஆண்டில் ராய் இளங்கலைப் பட்டம் பெற்றார். பெத்துன் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்பதால் உடனடியாக அங்கு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் 1894 வரை பெத்துன் கல்லூரியில் பேராசிரியர் பணியில் ஈடுபட்டு வந்தார்.
ராய் அபாலா போஸைப் பின்பற்றி பெண்களின் உரிமை ஆர்வலராக மாறினார். மேலும் வங்காளத்தில் பெண்களுக்கு வாக்களிக்கும் அடிப்படை உரிமையை உறுதி செய்வதற்காக வீரியத்துடன் பிரச்சாரம் செய்தார்.
1922லிருந்து இரண்டாண்டுகள் அவர் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.
கவிஞர் ராய்
பிரபல கவிஞரான ராய் சிறுவயதிலிருந்தே கவிதைகளை இயற்றத் தொடங்கினார். அவரது முதல் கவிதைப் புத்தகம் 'அலோ ஓ சாயா' 1889-ல் வெளியிடப்பட்டது. மேலும் அவர் பல குழந்தைகளின் கவிதைகள், சொனெட்டுகள், நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார். மேலும் 1930-ல் வங்காள இலக்கிய மாநாட்டின் இலக்கியப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார். 1932-ல் இருந்து 33 வரைபங்கியா சாகித்ய பரிஷத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
1929 ஆம் ஆண்டில், கொல்கத்தா பல்கலைக்கழகம் வங்க இலக்கியத்திற்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மதிப்புமிக்க ஜகதாரினி பதக்கத்தை அவருக்கு வழங்கியது.
காமினி ராய் தனது 69-வது வயதில் 1933-ல் காலமானார்.
ஐஏஎன்எஸ்