நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. பாஜக முதல்வர்கள் மீதான ஊழல் புகார்களால் இந்த கூட்டத் தொடர் முடங்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
வியாபம் ஊழல் வழக்கில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அவர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளன.
இதேபோல் ஐ.பி.எல். ஊழலில் ஈடுபட்ட லலித் மோடிக்கு உதவியதாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பதவி விலகக்கோரி காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
சத்தீஸ்கர் மாநில பொது விநியோகத் திட்டத்தில் ரூ.36 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இதில் முதல்வர் ரமண் சிங்கும் அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களின் முதல்வர்களும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்நிலையில் வரும் 21-ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. அப்போது பாஜக முதல்வர்களின் ஊழல் விவகாரங்களை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் திட்டமிட்டுள்ளன.
இந்த விவகாரங்களால் மழைக்கால கூட்டத் தொடர் முடங்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாஜக தரப்பில் காங்கிரஸுக்கு எதிராக வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கியுள்ள இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மீது அந்தக் கட்சி நாடாளுமன்றத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் என்று தெரிகிறது.
உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக அந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், மத்திய அரசுடன் அதிகாரப் போட்டி மோதலில் ஈடுபட்டுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோருக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.