புதுடெல்லி
உன்னாவ் பலாத்கார விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரான பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ குல்தீப் செங்காரை கொலை, கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துள்ளது சிபிஐ.
உன்னாவ் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயன்றதாக குல்தீப் செங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், இது இயல்பாக நடந்த விபத்துதான் என்று தெரிவித்தனர். மேலும் கொலை, கொலை முயற்சி குற்றச்சாட்டில் இருந்து செங்காரை விடுவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடந்த 2017-ம் ஆண்டு பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் செங்காரைக் கைது செய்தனர். பாஜகவில் இருந்தும் செங்கார் நீக்கப்பட்டார்.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் உட்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். அவர் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வருகிறார்.
இதையடுத்து சிறுமி பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது. பாஜக எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது கொலை, குற்றச்சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
மேலும், இந்த வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் முடிவில் முதல் கட்டக் குற்றப்பத்திரிகையை லக்னோவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று தாக்கல் செய்தது.
அந்த குற்றப்பத்திரிகையில், " பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கார் மீதான கொலை, கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளைக் கைவிடுகிறோம். அந்த விபத்து நடந்ததற்கும், செங்கர் திட்டமிட்டு செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
அந்த விபத்து லாரி ஓட்டுநரின் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ளது என்பதை விசாரணையில் அறிய முடிந்தது. ஆதலால், செங்கார் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சதி, கொலை முயற்சியில் உண்மையில்லை.
அதேசமயம், கவனக்குறைவாக லாரியை இயக்கியது, அதிவேகமாக இயக்கியது ஆகிய பிரிவுகளில் ஓட்டுநர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பான வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்ட சில அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேச அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.