இந்தியா

​​​​​​​''மம்தாஜி நீங்கள் அனைவருக்குமான முதல்வர்'' - அபர்ணா சென் ட்வீட்

செய்திப்பிரிவு

கொல்கத்தா, பிடிஐ

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியரும் அவரது மனைவியும் மகனும் கொடூரமாக கொலையுண்ட சம்பவத்தில் குற்றவாளிகளை நீதியுன்முன் நிறுத்துவதை உறுதி செய்யுங்கள். நீங்கள் அனைவருக்குமான முதல்வர்'' என்று திரைப்பட இயக்குநரும் நடிகையுமான அபர்னா சென் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை துர்கா பூஜா விழாக்களை மாநிலம் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில், முர்ஷிதாபாத் மாவட்டத்தின் ஜியாகஞ்ச்சில் உள்ள தனது வீட்டிற்குள் தொடக்கப்பள்ளி ஆசிரியரும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளருமான பந்து கோபால் பால், அவரது மனைவி பியூட்டி மற்றும் 8 வயது மகன் அங்கன் ஆகியோர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இச்சம்பவம் மாநிலத்தை உலுக்கியுள்ளது.

நேற்று, இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர்களும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோரும் மம்தா பானர்ஜி அரசை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மம்தா அரசை மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்டு பல்வேறு எதிர்க்கட்சிகளும் மம்தா அரசை கடுமையாக சாடியுள்ளன. இந்நிலையில் திரைப்பட இயக்குநரும் நடிகையுமான அபர்னா சென் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

''ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் அவரது கர்ப்பிணி மனைவி, மற்றும் குழந்தையோடு நம் சொந்த மாநிலத்திலேயே வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலைச் செயலுக்கு காரணம் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இது எங்களுக்கு மிகவும் அவமானம்!

இந்த குற்றத்தைச் செய்தவர்கள் நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவதை தயவுசெய்து உறுதிப்படுத்துங்கள் மம்தா ஜி. அரசியல் சார்புநிலை இல்லாமல், மேற்கு வங்கத்தின் அனைத்து குடிமக்களுக்கும் நீங்கள்தான் பொறுப்பு. நீங்கள் அனைவருக்குமான முதல்வர்!''

இவ்வாறு அபர்னா சென் தெரிவித்துள்ளார்.

சென், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட மற்ற பிரபலங்களுடன் இணைந்து கும்பல் கொலைகள் குறித்து சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சேர்ந்து திறந்த கடிதம் எழுதியதாக தேசத் துரோக குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டார். தற்போது அந்த வழக்கு ரத்தாகியுள்ளது. எனினும் கும்பல் கொலைகள் குறித்து சென் ''தேர்ந்தெடுக்கப்பட்ட சீற்றம்'' கொள்வதாக பாஜக ஆதரவாளர்கள் உள்ளிட்ட சில விமர்சகர்களும் சென் குற்றஞ்சாட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT