அவசரகால வழி இல்லாத பேருந்துகள் கர்நாடக மாநிலத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பல பேருந்துகளை கர்நாடக அதிகாரிகள் பறிமுதல் செய்ததால், தமிழகத்திலிருந்து சென்ற 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மாநில எல்லையான ஜூஜுவாடியில் நிறுத்தப்பட்டன.
கர்நாடக மாநிலத்திலிருந்து வட மாநிலங்களுக்குச் சென்ற சொகுசு ஆம்னி பேருந்துகள் சில மாதங்களுக்கு முன்பு விபத்துகளில் சிக்கி 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் அவசரகால வழி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கர்நாடக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதையடுத்து கர்நாடக நீதிமன்றம் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து ஆம்னி பேருந்துகளிலும் அவசரகால வழி எனப்படும் எமர்ஜென்சி டோர் அமைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை மே 1-ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேருந்துகளில் ஆய்வு
இந்நிலையில் தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்பட பல மாநிலங்களிலிருந்து கர்நாடகத்துக்குச் சென்ற பேருந்துகளை திங்கள்கிழமை ஆய்வு செய்த கர்நாடக அதிகாரிகள் அவசர கால வழி இல்லாத காரணத்தால், பேருந்துகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு இயக்கப்படும் பெரும் பாலான பேருந்துகளில் அவசர கால வழி இல்லை. இதனால் பெங்களூருக்குச் சென்ற 100-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் மாநில எல்லையான ஓசூர் அருகே ஜூஜூவாடியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ஒசூரில் இறங்கி மாற்று பேருந்துகளில் பெங்களூருக்குச் சென்றனர். இதேபோல் புதுச்சேரி, கேரளாவிலிருந்து வந்த ஆம்னி பேருந்துகளும் ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.