சமீர் உதின் ஷா - கோப்புப் படம் 
இந்தியா

‘‘அயோத்தி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ - அலிகர் பல்கலை முன்னாள் துணை வேந்தர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

லக்னோ

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை முஸ்லிம்கள், இந்துக்களிடம் ஒப்படைத்து விடுவதே சிறந்தது என அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜமீருதீன் ஷா கூறியுள்ளார்.

அயோத்தி ராம ஜென்மபூமி பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்தர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன குழு வழக்கை விசாரிக்கிறது.தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறுவதால் அதற்கு முன் தீர்ப்பு வழங்குவது அவசியமாகும். இல்லாவிடில் ஒட்டுமொத்த விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

எனவே அக்டோபர் 18-ம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு இடையே மத்தியஸ்தர் குழு மூலம் மனு தாரர்கள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அயோத்தி விவகாரத்தில் அமைதிக்கான இந்திய முஸ்லிமகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அலிகர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜமீருதீன் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஜமீருதீன் ஷா பேசுகையில் ‘‘அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அதற்கு ஒரே வழி அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை முஸ்லிம்கள், இந்துக்களிடம் ஒப்படைத்து விடுவதே சிறந்தது. இதன் மூலம் சமூக நல்லணிக்கம் ஏற்படுவதுடன், பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். நலெ்லண்ண அடிப்டையில் கூட முஸ்லிம்கள் இந்த முடிவை எடுக்கலாம். ஏனெனில் நீதிமன்ற தீர்ப்பு ஆதரவாக வந்தால் கூட அங்கு மசூதியை மீண்டும் கட்டுவது என்பது நடக்க முடியாத காரியம். எனவே மதநல்லணிக்கத்தை ஏற்படுத்த அந்த இடத்தை இந்துக்களிடமே ஒப்படைப்பது மட்டுமே தீர்வாக இருக்க முடியும்’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT