புதுடெல்லி
போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் மல்விந்தர் சிங் ரூ.2,397 கோடி நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
ரெலிகேர் பின்வெஸ் லிமிட் (ஆர்எப்எல்) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநராக மல்விந்தர் சிங் இருந்தபோது, இந்த முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மல்விந்தர் சிங் கைது செய்யப்பட்டார் என டெல்லி போலீஸாரின் பொருளாதார குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தில் மல்விந்தர் சிங்கின் சகோதரர் சிவிந்தர் மோகன் சிங், சுனில் கோத்வானி, கவி அரோரா, அனில் சக்சேனா ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருந்தனர். இதில் முன்னாள் இயக்குநரான மல்விந்தர் சிங் ஆர்இஎல் நிறுவனத்தின் நிதியை முறைகேடாக வேறு ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்று கடந்த மார்ச் மாதம் ஆர்எல்இ நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஆர்இஎல் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆர்எப்எல் நிறுவனத்தின் சார்பில் மன்ப்ரீத் சிங் சூரி, இந்தப் புகாரை சிவிந்தர், கோத்வானி, மல்விந்தர் உள்ளிட்டோருக்கு எதிராக அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸாரின் பொருளாதார குற்றப்பிரிவு துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில் நிறுவனத்தில் முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து, மல்விந்திர் சிங்குக்கு எதிராக போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மல்விந்தர் சிங்கை விசாரணைக்காக டெல்லி போலீஸார் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் இருந்ததையடுத்து, அவரை இன்று காலை முறைப்படி கைது செய்ததாக போலீஸார் அறிவித்தனர்
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஓ.பி. மிஸ்ரா கூறுகையில், " ஆர்இஎல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த மல்விந்தர் சிங் அவரின் சகோதரர்கள் நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்று அதை வேறு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் நிறுவனம் மிகவும் நலிவடைந்து ரூ.2,397 கோடி கடனுக்கு ஆளானது. இது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததையடுத்து, மல்விந்தர் சிங் கைது செய்யப்பட்டார்" எனத் தெரிவித்தார்.