மங்களூரு,
பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்பெற்ற சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால் நாத் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 69
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான கத்ரி கோபால்நாத் கடந்த 1949-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி தக்சின கன்னடாவில் உள்ள பந்தவால் தாலுகாவில் இருக்கும் மிதாகரே கிராமத்தில் பிறந்தார். கோபால்நாத்தின் தந்தை தனியப்பா ஒரு பிரபல நாதஸ்வர கலைஞர்.
சிறுவயதில் இருந்தே இசையில் நாட்டம் கொண்ட கத்ரி கோபால்நாத் சாக்சபோன் வாசிக்கும் கலையையும், கர்நாடக இசையையும் என். கோபாலகிருஷ்ண அய்யர் என்பவரிடம் முறையாகக் கற்றார்.
சிறுவயதில் மைசூரூ அரண்மைனைக்கு சென்றிருந்த கோபால்நாத் அங்கு சாக்சபோன் இசை வாசிக்கப்படுவதை கேட்டு மெய்மறந்தார். அப்போதுமுதல் தானும் சாக்சபோன் கலைஞராக வர வேண்டும் என்ற உந்துதுல் அவருக்கு ஏற்பட்டது. சாக்சபோன் கற்றபின் முதன்முதலில் கோபால்நாத் செம்பை நினைவு அறக்கட்டளையில் இசை அரங்கேற்றத்தை நடத்தினார்
1980-ம் ஆண்டு மும்பையில் நடந்த ஜாஸ் நிகழ்ச்சி கத்ரி கோபால்நாத் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்திய வானொலியின் 'ஏ' கிரேட் கலைஞராக கத்ரி கோபால்நாத் வலம் வந்தார். அதன்பின் பெர்லின், லண்டன், ஜெர்மன், மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடந்த ஜாஸ் நிகழ்ச்சியிலும் கோபால்நாத் இசை அரங்கேற்றம் செய்தார்.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தமிழில் டூயட் திரைப்படத்தில் கத்ரி கோபால்நாத் வாசித்த சாக்சபோன் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கத்ரி கோபால்நாத் கலைத் திறமையை போற்றி, தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. மத்திய அரசு சார்பில் 2004-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், கர்நாடக கலாஸ்ரீ விருது, கேந்திரா சங்கீதா நாடக அகாதெமி விருது, சாக்சபோன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை கத்ரி கோபால்நாத் பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கத்ரி கோபால்நாத் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று கத்ரி கோபால்நாத் காலமானார்.
கத்ரி கோபால்நாத்துக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிக்காந்த் கத்ரி என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர். மற்றொரு மகன் குவைத்தில் வசிக்கிறார். கத்ரி கோபால்நாத்தின் இறுதிச் சடங்கு அவரின் சொந்த கிராமமான படவினங்காடியில் நடைபெறுகிறது.