மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக கர்நாடக பா.ஜ.க. தலைவர்களி டையே கடும் போட்டி நிலவுகிறது.
கர்நாடக மாநில பா.ஜ.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர், முன் னாள் துணை முதல்வர்கள் அசோக், ஈஸ்வரப்பா, தேசிய பொதுச்செய லாளர் அனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சரவையில் பங்கேற்க போட்டி
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள், அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பன உள்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மத்தியில் அமையப் போகும் பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடகாவில் இருந்து எத்தனை பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப் பது, எந்தத் துறைகளை பெறுவது என்பது குறித்தும் ஆலோசித்தனர்.
முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா, பொதுச்செயலாளர் அனந்தகுமார், மாநில தலைவர் பிரஹலாத் ஜோஷி ஆகியோரிடையே மத்திய அமைச்சரவையில் இடம்பிடிப் பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பிறகு எடியூரப்பா நிருபர்களிடம் பேசிய போது, “கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்ட இடங்களை பாஜக கைப்பற்றும். ஷிமோகாவில் நான் வெற்றிபெறுவது உறுதி. மோடியின் அமைச்சரவையில் பங்கேற்று மக்களுக்கு சேவையாற்றுவேன்'' என்றார்.
பொதுச்செயலாளர் அனந்த குமார் கூறியபோது, “பிரதமர் பதவியை ஏற்கவிருக்கும் எனது நெருங்கிய நண்பர் நரேந்திர மோடி நல்லாட்சி வழங்குவார். நானும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளேன்'' என்றார்.
மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது தொடர்பாக கர்நாடக மாநில பாஜக தலைவர்க ளிடையே கடும்போட்டி நிலவு கிறது. பா.ஜ.க. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக தலைவர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
குமாரசாமி கருத்து
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியபோது, “மக்கள வைத் தேர்தல் முடிவுகள் வெளி யாவதற்கு முன்பே பா.ஜ.க.வினர் மத்திய அமைச்சர் கனவில் மிதக்க ஆரம்பித்துவிட்டனர். கருத்துக் கணிப்புகளை நம்பி பல்வேறு கணக்குகளை தீட்டிவரும் பா.ஜ.க. வினரின் கனவு பலிக்காது. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியபோது பதவிக்காக அவர்கள் அடித்துக்கொண்டதால் உட்கட்சி பூசல் வெடித்தது. அதே போல் இப்போதும் உட்கட்சிப் பூசல் வெடிக்கப்போகிறது'' என்றார்.