இந்தியா

பெங்களூருவில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை: ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு

செய்திப்பிரிவு

பெங்களூரு

பெங்களூருவில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழையால் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி தென் மேற்கு பருவமழை பெய்தது. பிஹார், உத்தர பிரதேசம், குஜராத் என பல மாநிலங்களிலும் இந்த ஆண்டு வழக்கத்தை விடவும் கூடுதல் மழை பெய்தது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.

பருவமழை செப்டம்பர் 30-ம் தேதி முதல் நாட்டின் பல பகுதிகளில் இருந்து விலகத் தொடங்கியது. தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களில் 970 மீ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 10 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் மட்டும் 16 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தாக்கம் தென் மாநிலங்களில் ஏற்கெனவே குறைந்துள்ள நிலையில் மத்திய இந்தியாவிலும், வடமேற்கு இந்தியாவிலும் தற்போது விலகத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் இருந்து அடுத்த சில நாட்களில் விலகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சில பகுதிகளில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. பெங்களூருவின் வடப்பகுதியில் உள்ள தோதரபித்தரகல்லு உள்ளிட்ட இடங்களில் 110 மில்லி மீட்டர் மழை ஒரேநாள் இரவில் கொட்டித் தீர்த்தது. இதபோலவே பகலகுந்தே பகுதியில் 100 மில்லி மீட்டர் மழை பெய்தது.

இதனால் இங்குள்ள ஏரி நள்ளிரவில் நிறைந்து தண்ணீர் சாலைகளில் வழிந்தோடியது. தாழ்வான பகுதிகளில் ஏரி தண்ணீர் சூழ்ந்ததால் மக்கள் திடீர் வெள்ளத்தை சந்தித்தனர். வீடுகளில் தண்ணீர் புகுந்தது. தூங்கிக் கொண்டிருந்த பலரும் வெள்ளத்திற்குள் சிக்கினர். அவர்கள் அனைவரும் உடனடியாக மேட்டுப்பகுதிகளுக்குச் சென்றனர்.

பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளை மேயர் கெளதம் குமார் உள்ளிட்டோர் இன்று காலை பார்வையிட்டு தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கினர். பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT