இரா.வினோத்
பெங்களூரு
அமமுக பொதுச்செயலாளர் சசிகலா இருக்கும் பெங்களூரு சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்
பட்டுள்ளார். அந்த சிறையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று 4 மணி நேரம் சோதனை நடத்தினர். ஆண் கைதிகள் மற்றும் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள வார்டுகளில் சுமார் 4 மணி நேரம் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ஆண் கைதிகளிடம் இருந்து 37 கத்திகள், கஞ்சா, செல்போன், சிம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பெண்கள் பிரிவில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை.
டிடிவி தினகரன் சந்திப்பு
அமமுக துணை பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் நேற்று சசிகலாவை சிறையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமமுகவை சட்டப்படி பதிவு செய்வது தொடர்பான விசாரணை வருகிற 17-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் நடைபெறுகிறது. அதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், வழக்கறிஞர்களும் பங்கேற்று எங்கள் தரப்பு விளக்கங்களை முன் வைப்பார்கள். விரைவில் கட்சி பதிவு செய்யப்பட்டு, தனி சின்னம் பெறப்படும். அதன் பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விடுதலையை கெடுக்க சதி
சசிகலா சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவதாக கடந்த 2017-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா புகார் அளித்தார். அதன்பேரில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி கடந்த ஆண்டு இறுதியில் கர்நாடக உள்துறை அமைச்சகத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
கடந்த ஜனவரியில் ஊடகங்களில் வெளியான இந்த அறிக்கையில், ‘’சசிகலா முறைகேடாக சிறையில் சிறப்பு சலுகைகளை அனுபவித்து வருவது உண்மையே. சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரிக்க வேண்டும்’’ என பரிந்துரை செய்தது.
கடந்த 10 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை தமிழக ஊடகங்கள் நேற்று வெளியிட்டு திடீர் பரபரப்பை ஏற்படுத்தின. நன்னடத்தை விதிமுறைகளின் கீழ் தன்னை விரைவில் விடுதலை செய்யுமாறு சசிகலா கோரிவரும் நிலையில், இந்த அறிக்கை திடீரென பரபரப்பாக மாற்றப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சசிகலா முன்கூட்டியே வெளியே வருவதை தடுக்கும் வகையில், பழைய அறிக்கையை மீண்டும் ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பாக ஆக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தமிழக அரசியல்வாதிகள் சிலர் இருக்கின்றனர் என அமமுக வட்டாரம் தெரிவித்துள்ளது.