இந்தியா

பிரதமரை ராகுல் அவமதித்துவிட்டார்: சிவ சேனை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபச்சார விருந்தில் ராகுல் காந்தி கலந்துகொள்ளாதது அவமதிப்பு செயல் என்று சிவ சேனை மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரிவு உபச்சார விருந்தளித்தார். இந்த விருந்தில் முக்கியத் தலைவர்கள் யாரும் கலந்துக் கொள்ளவில்லை என்பதோடு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துக் கொள்ளவில்லை.

இதற்கு எதிர்க்கட்சி மற்றும் ஊடகங்கள் தரப்பில் பல்வேறு யூகங்கள் கிளம்பும் வேளையில், பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி சந்தித்து, இந்த விருந்தில் கலந்துக்கொள்ள முடியாது என்று கடந்த வாரமே கூறியதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து சிவ சேனை மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், "ராகுல் காந்தி எப்போதும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு விடுமுறைக்காகத்தான் இந்தியா வருவார். மே 16-க்கு பின் அவர் மீண்டும் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார். அவருக்கு தேர்தல் முடிவுகள் குறித்து நன்றாக தெரிந்துள்ளது.

இந்த நிலையில் இறுதி பிரிவு உபச்சார விருந்துக்குக் கூட ராகுல் காந்தியால் கலந்துக் கொள்ள முடியவில்லை. பொதுவாக அவர் மக்களவைக்குத்தான் ஒழுங்காக வரமாட்டார். ஆனால் இந்த முறை பிரதமருக்கு வழங்கிய பிரிவு உபச்சார நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளாமல் அவரை அவமதித்துவிட்டார்" என்றார் அவர்.

SCROLL FOR NEXT