இந்தியா

சாலை விபத்தில் குழந்தை பலி, ஹேமா மாலினி காயம்: கார் ஓட்டுநர் கைது

பிடிஐ

நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினியின் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், எதிரே வந்த காரில் இருந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹேமா மாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காரை வேகமாக ஓட்டியதாக, அவரது ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

இந்தி நடிகையும், மதுரா தொகுதி பாஜக எம்.பி.யுமான ஹேமா மாலினி (66) வியாழக்கிழமை இரவு ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பென்ஸ் காரும் எதிரே வந்த மாருதி ஆல்டோ காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் எதிரே வந்த காரில் இருந்த 4 வயது பெண் குழந்தை பரிதாபமாக பலியானது. அதே காரிலிருந்த ஓர் ஆண், 2 பெண்கள், மற்றுமொரு குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகை ஹேமா மாலினிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹேமா மாலினி கார் ஓட்டுநர் கைது

இந்த விபத்து குறித்து நடிகை ஹேமா மாலினியின் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காரை அதிவேகமாக ஓட்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தெரியவந்ததும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "தவுசா சாலை விபத்து தொடர்பாக தகவல் அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உடனடியாக அனைத்து மீட்பு மற்றும் மருத்துவ உதவிகளையும் செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம்" என்று தெரிவித்தார்.

ஹேமா மாலினிக்கு பலத்த காயம்

விபத்தில் காயம் அடைந்த ஹேமமாலினியை பாஜக எம்.எல்.ஏ. சங்கர் லால் சர்மா நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, "ஹேமா மாலினியின் நேற்றி, கண், முதுகு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. பலத்த காயங்களால் அவதிபட்டு வருகிறார். விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்" என்றார்.

SCROLL FOR NEXT