மும்பை
பிஎம்சி வங்கி மோசடி புகாரில் சிக்கியுள்ளவர்களின் போலீஸ் காவலை அக்டோபர் 14-ம் தேதி வரை நீட்டித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது வங்கியில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
மும்பையில் பிஎம்சி எனப்படும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்ததால் வங்கியின் செயல்பாடுகளை தணிக்கை செய்யவும் அதற்கு முன்பு புதிய கடன் மற்றும் சேமிப்பு திரட்டுவதற்கும் ஆர்பிஐ தடை விதித்தது.
ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ. 6,500 கோடி வரை பிஎம்சி வங்கி கடன் வழங்கியுள்ளது. இது ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாட்டு வரம்பை விட 4 மடங்கு அதிகமாகும். அத்துடன் வங்கியின் மொத்த சொத்து மதிப்பான ரூ.8,800 கோடியில் 73 சதவீதம் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 23-ம் தேதி பிஎம்சி வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. அடுத்த 6 மாதங்களுக்கு புதிதாக கடன் வழங்குவது, புதிதாக சேமிப்புகளை ஏற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது.
பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வங்கி நிர்வாகம் மற்றும் கடன் வாங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. நிதி நெருக்கடிக்கு உள்ளான கட்டுமான நிறுவனமான ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோரை பொருளாதார விவகாரங்களுக்கான(இஓடபிள்யூ) அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.3,500 கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. பிஎம்சி வங்கி யின் இயக்குநர் ஜாய் தாமஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பிஎம்சி வங்கி முன்னாள் தலைவர் வார்யம் சிங்கும் கைதாகியுள்ளார்.
பிஎம்சி வங்கி மோசடியில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ள அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக மும்பையில் பல்வேறு இடங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை நடத்தினர்.
இந்தநிலையில் பிஎம்சி வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வார்யம் சிங் உள்ளிட்டோர் இன்று மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை போலீஸார் அழைத்து வந்தபோது, பிஎம்சி வங்கியில் முதலீடு செய்துள்ள பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு வெளியே கூடி அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
வங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை வெளியே விடக்கூடாது எனக் கூறி அவர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து பிஎம்சி வங்கி தலைவர் வார்யம் சிங், ஹெச்டிஐஎல் நிறுவனத்தின் இயக்குநர்கள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோரின் போலீஸ் காவலை அக்டோபர் 14-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.