இந்தியா

உத்தரபிரதேச மாநில காங்கிரஸின் புதிய நிர்வாகக் குழுவில் 45 வயதுக்குட்பட்டவர்களை தேர்வு செய்தார் பிரியங்கா

செய்திப்பிரிவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வழக்கத்திற்கு மாறாக வயது குறைவானவர்களை உறுப் பினர்களாக தேர்ந்தெடுத்துள்ளார் அம்மாநில கட்சிப் பொறுப்பாளரான பிரியங்கா வதேரா.

மக்களவைத் தேர்தலில் ஏற் பட்ட தோல்விக்கு பொறுப்பு ஏற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து உ.பி. உள்ளிட்ட நாட்டின் பெரும் பாலான மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனால், தலைவராக இருந்த பாலிவுட் நடிகர் ராஜ்பப்பருக்கு பின் உ.பி.யில் புதிய நிர்வாகக் குழு அமர்த்தப்படாமல் இருந்தது. தற்போது பிரியங்காவிற்கு நெருக்க மானவரான அஜய் குமார் லாலு உ.பி. காங்கிரஸின் புதிய தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார்.

உ.பி.யின் கிழக்கு பகுதியை சேர்ந்த அஜய் குமார், இரண்டா வது முறையாக எம்.எல்.ஏவாகி உள்ளார். குஷிநகரின் தும்குஹிராஜ் தொகுதியில் அஜய் 2012-ல் முதன் முறையாக வென்றபோது பாஜக வின் நந்த் கிஷோர் மிஸ்ராவை 5,860 வாக்குகளில் தோற்கடித்தார்.

2017-ல் வீசிய பிரதமர் நரேந்திர மோடி அலையிலும் அஜய் கூடுதல் வாக்குகளுடன் மீண்டும் வெற்றி பெற்றார். இதனால், பிற் படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவ ரான அஜய் குமார் லாலு, உ.பி. காங்கிரஸின் தலைவராக்கப்பட்டு உள்ளார்.

வழக்கமாக உ.பி. மாநில காங்கிரஸ் நிர்வாகக் குழுவில் மூத்த தலைவர்களுடன் சுமார் 500 பேர் இடம் பெறுவது வழக்கம். ஆனால், இந்தமுறை வழக்கத்திற்கு மாறாக வயது குறைவானவர்களுடன் வெறும் 56 பேர் மட்டும் புதிய குழுவில் இடம் பெற்றுள்ளனர். 40 வயது தலைவர் அஜயின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் 40 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர்.

கல்லூரிக் காலங்களில் மாணவர் பேரவை தலைவராகவும் இருந்த அஜய் குமார் தொடர்ந்து சமூகநீதி பிரச்சினைகளை முன்னிறுத்தி, பல போராட்டங்கள் நடத்தி உள்ளார். அதிகமாக தர்ணாக்கள் நடத்தியதால் அஜய் குமாரை உ.பி.வாசிகள் ‘தர்ணாகுமார்’ எனவும் அழைப்பது உண்டு. உ.பி.யில் 11 தொகுதிகளுக்கு அக்டோபர் 11-ல் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் தனது கட்சிக்கு புதிய நிர்வாகக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

லக்னோவில் குடியேறும் பிரியங்கா

பல வருடங்களாக பிரியங்கா மீது உ.பி. காங்கிரஸாருக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மக்களவைத் தேர்தலில் திடீர் என அரசியலில் குதித்த பிரியங்கா, காங்கிரஸின் பொதுச்செயலாளரானார். எனி னும், உ.பி.யில் அவரது தலைமை யில் எந்தப் பலனும் கட்சிக்கு கிடைக்கவில்லை. மாறாக அவரது சகோதரரான ராகுல் காந்தியே அமேதியில் தோல்வி அடைந்தார். இதனால், டெல்லியில் இருந்து லக்னோவில் குடியேறி உ.பி.யில் அதிக நாட்கள் கழிக்க பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

இவருக்காக லக்னோவின் கோகலே மார்கில் உள்ள ஷீலா கவுலின் பூட்டியிருந்த பங்களா தயாராகி வருகிறது. இவரது கணவரான பேராசிரியர் கைலாஷ்நாத் கவுல், முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மைத்துனர் ஆவார். கவுலுக்கு நேரு காலத்தில் காங்கிரஸில் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டிருந்தன.

ஷீலா கவுலின் குடும்பத்தினர் வெளிநாடுகளில் தங்கி உள்ளனர். இதனால் அந்த பங்களாவில் தங்குவதற்கு பிரியங்கா முடிவு செய்துள்ளார்.

SCROLL FOR NEXT