புதுடெல்லி
பெண்கள் கண்ணியமாக நடத் தப்படுவதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
டெல்லியில் துவாரகா ஸ்ரீ ராம் லீலா சங்கம் சார்பில் நேற்று தசரா பண்டிகை கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:
நவராத்திரி பண்டிகையின் போது பெண் கடவுள்களை நாம் வழிபடுகிறோம். இந்தப் பண்டிகை உணர்வை மக்கள் முன் னெடுத்துச் செல்லும் வகையில், பெண்கள் அதிகாரம் பெறவும் அவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதி செய்யவும் பாடுபட வேண்டும்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பது, எரிசக்தி மற்றும் நீர்வளத்தை பாதுகாப்பது, ஒரே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது ஆகிய வற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
பண்டிகைகளின் நாடாக இந்தியா திகழ்கிறது. பண்டிகை கள் நம் நாட்டின் உயிரோட்டமாக விளங்குகின்றன. இந்த தீபாவளி பண்டிகையின்போது, ஏதேனும் சாதித்த அல்லது மற்றவர்களை ஊக்குவித்த பெண் குழந்தைகளை நாம் பாராட்டுவோம்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.