காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், பிரதமர் மோடி : கோப்புப்படம் 
இந்தியா

எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை: 49 பேர் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய பிரதமர் மோடிக்கு சசி தரூர் கடிதம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்

இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத் துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.

எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை. பிரதமரை விமர்சித்தவர்களை தேசத் துரோகிகள் போல் கருதக்கூடாது என்று சசி தரூர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

கும்பல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது பிஹார் மாநிலம், முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத் துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சசி தரூர் , 49 பிரபலங்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

''கும்பல் வன்முறையை தடுக்கக் கோரி கடந்த ஜூலை 23-ம் தேதி உங்களுக்குக் கடிதம் எழுதிய 49 பிரபலங்களுக்கு எதிராக பிஹார் முசாபர்பூரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பது ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததற்கு எனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்.

ஜனநாயகத்தில் எதிர்ப்பை வரவேற்க வேண்டும். எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை. உங்களைப் பற்றியும, உங்கள் அரசு குறித்தும் கருத்து வேறுபாடு இருந்தால், அதை வெளியே தெரிவிக்க கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தவர்கள் தங்களின் துணிச்சலை வெளிப்படுத்த எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இருந்திருந்தால், இந்தியா இன்று சுதந்திரமான தேசமாக வரலாற்றில் இருக்காது.

வகுப்புவாதம் அல்லது குழந்தை கடத்தல் வதந்திகள் ஆகியவை மூலம் கும்பல் வன்முறை தூண்டப்படலாம். கும்பல் வன்முறை ஒரு நோய், அது வேகமாகப் பரவக்கூடியது. சரியான குடிமகன்களாக இருப்பதால்தான் இந்த 49 பேரும் உங்களுக்கு இதை தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.

எதிர்ப்பு இல்லாமல் ஜனநாயகம் இல்லை. வேறுபட்ட கருத்துகள், கண்ணோட்டங்கள், சித்தாந்தங்கள் ஆகிவற்றால்தான் இந்தியாவின் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியா வெற்றிகரமான, வலிமைமிக்க ஜனநாயகமாக இருந்து வருகிறது.

இந்தியாவின் குடிமகன்கள் என்ற அடிப்படையில், ஒவ்வொருவரும் எந்தவிதமான அச்சமுமின்றி, உங்கள் பார்வைக்கு இதைக் கொண்டுவந்துள்ளனர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தைக் கொண்டுவந்துள்ளதால் அதைத் தீர்க்க வேண்டும்.

கருத்துச் சுதந்திரத்துக்கு நீங்கள் ஆதரவாக இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மக்களுக்கு அர்த்தங்களைக் கூறுகிறது. அது மவுன் கி பாத் (மவுனமாக இருத்தல்) ஆகிவிடக்கூடாது.

கடந் 2016-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நீங்கள் பேசுகையில், அரசியலமைப்புச் சட்டம் என்பது எங்கள் அரசின் புனித நூல் என்று குறிப்பிட்டீர்கள். எவ்வாறினும், உங்களின் பேச்சுக்கு விரோதமாகவே உங்கள் அரசின் செயல்பாடுகள் இருக்கின்றன. அப்படியென்றால், அடிப்படையான இந்த விஷயங்களுக்காக உங்கள் கருத்துகளை மாற்றுகிறீர்களா?

உங்கள் அரசுக்கும், உங்களுக்கும் எதிரான கருத்துகளையும் விமர்சனங்களையும் வைப்பவர்களை தேசவிரோதியாகவும், எதிரியாகவும் சித்தரிக்கக் கூடாது. விமர்சனங்களின்றி எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.

பிரச்சினைகள் முன் அனைவரும் பார்வையற்றவர்களாக இருந்தால், அது மக்களைத்தான் பாதிக்கும். சர்வாதிகார ஆட்சிக்கு மாறுவது கடினம். அது நமது அரசியலமைப்பின் மதிப்புகளுக்கு விரோதமானது.

அரசைப் பற்றியும், அரசின் கொள்கைகளைப் பற்றியும் ஒவ்வொரு முறையும் விமர்சிக்கும்போதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதுதான் புதிய இந்தியாவில் நீங்கள் தேசத்துக்கு அளித்த வாக்குறுதியா?.

இந்த புதிய இந்தியாவைத்தான் நீங்கள் உருவாக்க விரும்பினீர்களா? குடிமக்களின் குறைகளை அறிந்து அதைத் தீர்த்துவைக்க மீட்டீர்களா?

ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் அரசியல் கட்சிகள், தனிமனிதர்கள் அனைவரும் அகற்றப்பட்டு, நாட்டின் எதிரிபோல நடத்தப்படுவதுதான் புதிய இந்தியாவா?. அரசு நிர்வாகத்தின் தோல்விகளை வெளிக்காட்டும் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதுதான் புதிய இந்தியாவா?''.

இவ்வாறு சசி தரூர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளார்.

பிடிஐ

SCROLL FOR NEXT