புதுடெல்லி
மத்திய அரசுக்குச் சொந்தமான காலியாக இருக்கும் இடங்கள், பங்களாக்கள், மனைகள் ஆகியவற்றை ஆக்கிமிரப்பில் இருந்து பாதுகாக்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை பணியில் அமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கான திட்டம், ஒப்பந்தப் புள்ளி, நிறுவனங்கள் குறித்த விவரத்தை மத்திய வீடு மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
மத்திய அரசின் முதன்மையான கட்டுமான நிறுவனமான மத்திய பொதுப்பணித்துறையிடம் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளது
தலைநகர் டெல்லி மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு நகரங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான இடங்கள், அடுக்குமாடி வீடுகள், பிளாட்கள், வீடுகள் கட்டப்பட்டு காலியாக இருக்கின்றன. அதை சிலர் ஆக்கிரமித்துக்கொண்டு அங்கிருந்து செல்லாமல் அரசியல் செல்வாக்குடன் இருக்கிறார்கள். அவர்களைக் காலி செய்யும் பொருட்டும் இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து காக்கும் பொருட்டும் இந்த தனியார் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.
இதன்படி காலியாக இருக்கும் மத்திய அரசின் சொத்துகளை ஆண்டு முழுவதும் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு இடத்துக்கும் இரு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
டெல்லியில் மத்திய அரசுக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான இடங்கள், வீடுகள், பங்களாக்கள் காலியாக இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அதாவது தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு மட்டுமே ஆண்டுக்கு ரூ.93 லட்சம் தேவைப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் பெரும்பாலும் முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற போலீஸார் ஆகியோரையும் குறைந்தபட்சம் இதுபோன்ற பாதுகாப்புப் பணியில் 3 ஆண்டுகள் வரை ஈடுபட்ட அனுபவம் இருக்க வேண்டும். இந்தப் பணியாளர்களைப் பராமரித்தல், ஒழுக்க நடவடிக்கை, ஊதியம் அனைத்துக்கும் பாதுகாப்பு நிறுவனங்களே பொறுப்பு எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிடிஐ