கொல்கத்தா
சமூகநல்லிணக்கம், ஒற்றுமைக்கு உதாரணமாக, துர்கா பூஜையில் 4வயது முஸ்லிம் சிறுமையை கடவுளாக நினைத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வழிபட்டனர்.
துர்கா பூஜையில் மகா அஷ்டமி அன்று நடக்கும் குமாரி பூஜை மிகவும் விஷேசமானது. இந்த நாளில் பூப்பெய்தாத சிறுமிகளை அழைத்து வந்து அவர்களை துர்கா தேவியாக நினைத்து வழிபடுவார்கள்.
காலம்காலமாக பிராமணக் குடும்பத்தில் இருந்துதான் சிறுமிகள் அழைக்கப்படுவார்கள். ஆனால், அனைத்து பாரம்பரியத்தையும் தகர்த்து, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் முஸ்லிம் சிறுமியை துர்கா தேவியாக நினைத்து ஒரு குடும்பம் வழிபட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள நார்த் 24 பர்கானா மாவட்டத்தைச் சேர்ந்த தமால் தத்தா குடும்பத்தைச் சேர்ந்தவர்களே நேற்று இந்த புதிய வழிபாட்டைச் செய்தார்கள்
நார்த் 24 பர்கானாவில் உள்ள அர்ஜூன்பூரைச் சேர்ந்த தமால் தத்தா அங்குள்ள நகராட்சியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். தத்தா குடும்பத்தினர் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து துர்கா பூஜை செய்து வருகின்றனர். இந்த முறை பிராமனக் குடும்பத்தைத் சேர்ந்த சிறுமியை அழைப்பதற்கு பதிலாக முஸ்லிம் சிறுமியை அழைக்கக தத்தா குடும்பத்தினர் முடிவு செய்தனர்
இதுகுறித்து தமால் தத்தா கூறுகையில், " இந்த குமாரி பூஜைக்கு வழக்கமாக பிராமணக் குடும்பத்தில் இருந்து சிறுமியை அழைத்து வந்து துர்கா தேவியாக நினைத்து வழிபடுவோம். ஆனால் இந்த முறை பாரம்பரியத்தை உடைத்து, சமூக நல்லினக்கத்தை உண்டாக்க, மதம், சாதி, பாராமல் முஸ்லிம் சிறுமியை துர்கா தேவியாக நினைத்து வழிபட முடிவு செய்தோம்.
இதற்கு முன் பிராமணர் அல்லாத சிறுமியை வழிப்பட்டோம். இந்த முறை முஸ்லிம்சிறுமியை அழைக்கும் பொருட்டு எனு அலுவலக நண்பர் இப்ராஹிமிடம் உதவி கோரினேன்.
இப்ராஹிம் ஆக்ராவில் வசித்துவரும் தனது உறவினரின் 4 வயது மகள் பாத்திமாவை துர்கா தேவியாக வழிபட அழைத்து வந்தார். இதற்காக பாத்திமாவின் பெற்றோரிடம் பேசி சமாதானம் செய்து, அவர்களையும் பூஜைக்கு அழைத்து வந்திருந்தார். சமூக ஒற்றுமைக்காக முதல் முறையாக முஸ்லிம் சிறுமியை துர்கா தேவியாக வழிபட்டோம்" எனத் தெரிவித்தார்
பிடிஐ