மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் ஓரங்கட்டி தனது ஆதரவு தளத்தை வலிமையாக்கி கொண்டுள்ளார்.
மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
சிவசேனா 126 தொகுதிகளிலும் 148 தொகுதிகளில் பாஜகவும் 16 தொகுதிகளில் மற்ற கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் சமமான தொகுதிகளில் போட்டியிட கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இருதரப்பும் பேசியது. ஆனால் மக்களவைத் தேர்தலில் சிவசேனாவை விட பாஜக கூடுதல் தொகுதிகளில் வென்றதால் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக நிர்வாகிகள் கோரினர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி பங்கீட்டு சிக்கலால் இருகட்சிகள் இடையே கூட்டணி ஏற்படாமல் போனது. எனினும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி அரசு நடத்தி வருகின்றன.
இந்தமுறை சிவசேனாவுக்குரிய தொகுதிகளை கணிசமாக குறைத்ததில் முதல்வர் பட்னவிஸுக்கு குறிப்பிடத்தகுந்த பங்கு உண்டு என்கின்றனர் பாஜகவினர். தொகுதி பங்கீட்டில் தலைமையுடன் பேசி கறாராக நடந்து கொண்டார் பட்னவிஸ்.
இதுமட்டுமின்றி இந்த தேர்தலில் கட்சியின் ஜாம்பவான்கள் என வர்ணிக்கப்படும் பலருக்கு சீட் வழங்கப்படவில்லை.
கட்சியின் மூத்த தலைவர்களான ஏக்நாத் கட்ஸே, சந்திரசேகர் பவன்குலே, புரோஹித் மற்றும் வினோத் ஆவ்டே ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.
ஏக்நாத் கட்ஸேக்கு பதிலாக அவரது மகள் முக்தின் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கட்ஸே, தனது மகளுக்கு சீட் வழங்கப்பட்டு விட்டதால் அவருக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.
காம்டி தொகுதியில் அமைச்சர் சந்திரசேகர் பவன்குலேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரது மனைவி ஜோதி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதுபோலவே புரோஹித்தும், வினோத் ஆவ்டேயும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதபோதும் அதனை எதிர்க்கவில்லை.
இவர்கள் அனைவரும் முதல்வர் பட்னவிஸை விடவும் மூத்த தலைவர்கள். பாஜக நிர்வாகிகளாக நீண்டகாலம் பணியாற்றியவர்கள். கட்சியின் அசைக்க முடியாத சக்தியாக கூறப்பட்டவர்கள். முதல்வர் பதவிக்கு ஒரு காலத்தில் போட்டியாளர்களாக விளங்கியவர்கள்.
இந்த தொகுதிகளில் தற்போது சுரேஷ் ரானே, ராகுல் நர்வேர்கர், மேத்தா உள்ளிட்ட பட்னவிஸ் ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இந்த தேர்தலில் எல்லாம் தலை கீழாகியுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜகவை தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக பட்னவிஸ் கொண்டு வந்து விட்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் தேவேந்திர பட்னவிஸ் பாஜகவில் மட்டுமல்லாமல், மகாராஷ்டிர அரசியலிலும் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.