மும்பை
மும்பையில் புறநகர் ரயிலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் அவரிடம் ரூ.8.77 லட்சம் டெபாசிட், ரூ.1.75 லட்சம் ரூபாய்க்கு நாணயங்கள் வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
மும்பையில் கோவண்டி புறநகர் பகுதியில் பிச்சை எடுத்து வந்த முதியவர் பிரேடிசந்த் பன்னாராம்ஜி ஆசாத் (வயது 82). மும்பை துறைமுகம் மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரயிலில் பிச்சை எடுத்து வந்தார். உறவினர் யாரும் இல்லாத நிலையில் அனாதையாக வாழ்ந்து வந்த அவர் புறநகர் ரயிலில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். இதனால் அந்த வழியாக வழக்கமாக பயணம் செய்யும் பயணிகளுக்கு அவரது முகம் மிகவும் பரிச்சயம்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மன்குர்த் - கோவண்டி இடையே புறநகர் ரயில் தண்டவாளத்தில் உருக்குலைந்த நிலையில் ஆசாத் உடல் மீட்கப்பட்டது. அந்த வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிச்சை எடுக்கும் முதியவர் இறந்த சம்பவம் பத்திரிக்கைகளில் வெளியான நிலையில் அதனை கேள்வியுற்று துறைமுகம் மார்க்கத்தில் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் வருத்தமடைந்தனர்.
இந்தநிலையில் அந்த முதியவர் குறித்த தகவலை சேகரிப்பதற்காக மற்ற பிச்சைக்காரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கோவண்டி பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே ஒரு குடிசையில் ஆசாத தங்கியிருந்த விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த குடிசைக்கு சென்று போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்த பெட்டி ஒன்றில் 8.77 லட்சம் ரூபாய் இரண்டு வங்கிகளில் அவரது பெயரில் பிக்ஸ்சட் டெபாசிட் செய்யப்பட்டு அதற்கான ரசீது இருந்தது.
மேலும் ஒரு அந்த பெட்டியில் 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் ஏராளமான அளவில் இருந்தன. அதனை போலீஸார் எண்ணி பார்த்தபோது, 1.75 லட்சம் ரூபாய்க்கு நாணயங்கள் இருந்தன.
இதுமட்டுமின்றி அவர் அவ்வப்போது பிச்சை எடுக்கும் நாணயங்களை வங்கி சேமிப்பு கணக்கில் 96 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்துள்ளார். அதற்கான பாஸ்புக்கும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பெயரில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு அங்கிருந்து கைபற்றப்பட்டது. அதில் அவர் பிறந்த ஆண்டு 1937 எனவும், அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களும் தெரிய வந்துள்ளது.
மேலும் ஆசாத்தின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் என்பதும், அவரது மகன் சுகதேவ் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்துக்கும் மகன் சுகதேவை வாரிசுதாரராக அவர் பதிவு செய்துள்ளார். இதையடுத்து ஆசாத்தின் மகனை கண்டறியும் முயற்சியில் மும்பை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.