புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ரூ.59 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தப்படி, முதல் விமானம் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவின் தேவைக்கேற்ப பல்வேறு நவீன வசதிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விமானம் இந்திய விமானப் படையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது. இதைப் பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாரிஸ் செல்கிறார். அமைச்சருடன் விமானப்படை புதிய தளபதியாக பொறுப்பேற்றுள்ள ஆர்.கே.எஸ்.பதவுரியா உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பிரான்ஸ் விமானப்படை அதிகாரிகள், தஸ்ஸோ நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். அன்றையதினம் இந்தியாவில் தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், ரஃபேல் விமானத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆயுத பூஜை செய்வார். பின்னர் அந்த விமானத்தில் ராஜ்நாத் சிங் பறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஃபேல் ரக முதல் விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அடுத்த சில மாதங்களுக்கு அந்த விமானம் பிரான்ஸிலேயே இருக்கும். அங்கு இந்திய விமானப்படையின் 24 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முதல் தொகுப்பில் வழங்கப்படும் 4 விமானங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.