ஹைதபாபாத்
தெலங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த 48 ஆயிரம் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததால், அனைவரையும் பணி நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக உத்தரவிட்டார்.
தெலங்கானாவில் தற்போது பதுக்கம்மா என்ற திருவிழாவும், தசரா பண்டிகையும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 26 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை பணிக்குத் திரும்பக் கோரியும், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாகவும் முதல்வர் சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைத்து அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கிட வேண்டும், புதிதாக பணியாட்கள் நியமிக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
ஆனால், இவற்றை உடனடியாக செய்ய முடியாது, விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்த முதல்வர் சந்திரசேகர் ராவ் ஊழியர்கள் சனிக்கிழமை மாலைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், 2 நாட்கள் ஆகியும் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததால், மாநிலத்தில் போக்குவரத்து முடங்கி மக்கள் பண்டிகை நாட்களில் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதையடுத்து, அதிகாரிகளுடன் நேற்று அவசரமாக ஆலோசனை நடத்திய முதல்வர் சந்திரசேகர் ராவ், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைக்குச் செல்ல மறுத்துவிட்டார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 48 ஆயிரம் ஊழியர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பின் முதல்வர் சந்திரசேகர் ராவ் நிருபர்களிடம் கூறுகையில், "பண்டிகை நாட்களில் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டது மன்னிக்க முடியாத குற்றம். ஏற்கெனவே போக்குவரத்து கழகம் ரூ.1200 கோடி நஷ்டத்தில் செல்கிறது. இந்த வேலைநிறுத்தத்தால் ரூ.5 ஆயிரம் கோடியாக இழப்பு அதிகரிக்கும்" எனத் தெரிவித்தார்.
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தைச் சமாளிக்கும் விதமாக தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனங்களை கூடுதலாக பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஏறக்குறைய 2,500 பேருந்திகளை வாடகைக்கு அமர்த்தி மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதித்தது
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக களத்தில் இறங்கியுள்ளது. பாஜக விடுத்த அறிக்கையில், "முதல்வர் சந்திரசேகர் ராவ் எந்தவிதமான முன்யோசனையும் இன்றி, ஆத்திரமூட்டும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளார். தெலங்கானா உருவாக்கத்தில் துணையாக இருந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு முதல்வர் அளிக்கும் பரிசு இதுதானா? முதல்வர் சந்திரசேகர் ராவ் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளார். பல தீவிரமான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.