மலப்புரம்
விக் அடியில் தங்கத்தை வைத்துக் கடத்த முயற்சி செய்த கேரள இளைஞர், காவல்துறையினரிடம் வசமாக மாட்டினார்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் நவ்ஷத். இவர் ஷார்ஜாவில் இருந்து 1.13 கிலோ தங்கத்தைக் கடத்திக்கொண்டு கேரளா வந்தபோது பிடிபட்டார். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நூதன முறைகளில் தங்கம் கடத்தி வரும் நிறைய சம்பவங்களை அறிந்திருப்போம். சம்பந்தப்பட்ட நபர்கள், உள்ளங்காலில் இருந்து மலக்குடல் வரை, உடலின் பல்வேறு பகுதிகளில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வருவதையும் அவை பிடிபடுவதையும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தலையில் வைத்துத் தங்கத்தை சட்ட விரோதமாகக் கடத்தியது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும்.
தலைமுடியைப் பயன்படுத்திய நவ்ஷத்
விக் வைப்பதால் தலைமுடி வித்தியாசமாகத் தெரியக் கூடாது என்று திட்டமிட்ட நவ்ஷத், தலைமுடியின் ஒரு பகுதியை மழித்தார். காலி இடத்தில் முடியின் நிறத்திலும் வடிவத்திலும் ஒத்துப்போகும் விக்கைப் பொருத்தினார். அதற்கடியில் தங்கத்தை மறைத்து வைத்துக்கொண்டு கேரளா வந்தார்.
இந்நிலையில் சுங்க அதிகாரிகள், நூதன முறையில் தங்கத்தைக் கடத்தி வந்த நவ்ஷத்தைக் கையும் களவுமாகப் பிடித்தனர். நவ்ஷத்தின் பின்னால், கடத்தல் கும்பல் செயல்படலாம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.