இந்திய கடலோர காவல்படை சிறைபிடித்த இலங்கை மீன்பிடி படகு | படம்: ட்விட்டர் 
இந்தியா

இந்தியக் கடலில் இலங்கை மீன்பிடி படகு பறிமுதல்: 6 பேர் கைது

செய்திப்பிரிவு

கொச்சி

எல்லை தாண்டி வந்து இந்தியக் கடல் பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. இதில் மீனவர்கள் பயன்படுத்திய படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கடலோரக் காவல்படை செய்தித் தொடர்பாளர் இன்று கூறுகையில், ''கொச்சியை தலைமையகமாகக் கொண்ட ஐசிஜிஎஸ் சமர் கப்பல் கடந்த 1-ம் தேதி கேரளக் கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அப்போது இந்தியக் கடலில் இலங்கையைச் சேர்ந்த படகு ஒன்று தென்பட்டது.

இலங்கைப் படகில் வந்தவர்கள் இந்தியக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டறிந்தோம். இந்திய கடல்சார் மண்டலங்கள் சட்டம் 1976-ன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இலங்கையின் மீன்பிடி படகில் வந்த 6 பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். 600 கிலோ மீன்களுடன் இருந்த 'சமாதி 7' என்ற அந்தப் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. படகை கரைக்குக் கொண்டுவந்த பிறகு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT