மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் சந்திரசேகர் பவன்குலேவுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டநிலையில் அவரது மனைவி சுயேச்சையாக களமிறங்குகிறார்.
மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது.
இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனாவுக்கு 124 தொகுதிகள் வழங்க டெல்லியில் நடந்த பாஜக தேர்தல் கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மற்ற தொகுதிகளில் ஒரு சிலவற்றில் கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்கவும், 144 தொகுதிகளில் பாஜக போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
முதல்வர் பட்னவிஸ் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கோதூர்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் பட்டியலில் கட்சியின் மூத்த தலைவர்களான ஏக்நாத் கட்ஸே, சந்திரசேகர் பவன்கு, புரோஹித் மற்றும் வினோத் ஆவ்டே ஆகியோர் பெயர் இடம் பெறவில்லை.
ஏக்நாத் கட்ஸேக்கு பதிலாக அவரது மகள் முக்தின் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கட்ஸே, தனது மகளுக்கு சீட் வழங்கப்பட்டு விட்டதால் அவருக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார்.
காம்டி தொகுதியில் அமைச்சர் சந்திரசேகர் பவன்குலேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரது மனைவி ஜோதி சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனிடையே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சந்திரசேகர் ஏதும் முடிவெடுக்கவில்லை.