மும்பை
மகாராஷ்டிர மாநிலம் பல்தான் தொகுதியில் ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள இந்திய குடியரசு கட்சி சார்பில் சோட்டராஜனின் தம்பி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் எதிர்ப்பால் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர அரசின் பதவிக்காலம் முடிவடைவதால் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
நீண்டகாலமாக கூட்டணியில் உள்ள பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. நீண்ட இழுபறிக்கு பிறகு இருகட்சிகள் இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்தது.
சிவசேனா 124 தொகுதிகளிலும், மற்ற தொகுதிகளில் ஒரு சிலவற்றில் கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்கவும், 144 தொகுதிகளில் பாஜக போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆளும் கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சிக்கு பாஜக 6 தொகுதிகளை ஒதுக்கியது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ராம்தாஸ் அத்வாலே சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
அதன்படி, பல்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
(சோட்டா ராஜன்- கோப்புப் படம்)
இந்தநிலையில் திடீரென தீபக் நிகல்ஜே போட்டியிட குடியரசு கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிர மாநில அமைச்சருமான அவினாஷ் மகடேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த தொகுதியில் வசிக்காக நிகல்ஜே போட்டியிட குடியரசு கட்சி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பல்தான் தொகுதியில் தீபக் நிகல்ஜிக்கு பதிலாக திகம்பர் அகவானே போட்டியிடுவார் என மகடேகர் தெரிவித்துள்ளார். அவர் பாஜகவின் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் மகடேகர் அறிவித்துள்ளார். இதனால் அத்வாலே மற்றும் மகடேகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.