லக்னோவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் லக்னோ-டெல்லி தேஜஸ் தனியார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கிவைத்த காட்சி: படம் ஏஎன்ஐ 
இந்தியா

லக்னோ முதல் டெல்லி வரை; நாட்டின் முதல் தனியார் ரயில் சேவை: முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

லக்னோ

நாட்டில் தனியார் மூலம் முதன்முதலாக இயக்கப்படும் லக்னோ-டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் லக்னோவில் இருந்து டெல்லிக்கும், டெல்லியில் இருந்து லக்னோவுக்கும் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளது.

லக்னோ-டெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் முதல் தனியார் பயணிகள் ரயிலாகும். இந்த ரயிலின் வெற்றியைப் பொறுத்து அடுத்துவரும் காலங்களில் அதிகமான தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

லக்னோ ரயில் நிலையத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள், ஐஆர்சிடிசி தலைமை மண்டல மேலாளர் அஸ்வினி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்

லக்னோவில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் புதுடெல்லி ரயில் நிலையத்தை நண்பகல் 12.25 மணிக்குச் சென்றடையும். ஏறக்குறைய 6.15 நிமிடங்களில் டெல்லியை அடையும். பயணத்தின்போது கான்பூர், காஜியாபாத் ஆகிய இரு இடங்களில் மட்டுமே நின்று செல்லும். டெல்லியில் இருந்து மாலை 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.05 மணிக்கு லக்னோ வந்தடையும்.

முழுவதும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் ரயிலில் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ், சேர்கார் இருக்கைகள் உள்ளன. எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் 56 பயணிகளும், சேர்கார் பெட்டியில் 78 பயணிகளும் பயணிக்க முடியும்.

இந்த ரயிலில் பயணிகளின் உடமைகளை ரயில்வே நிர்வாகமே வீட்டுக்கு வந்து எடுத்துச் செல்லும் வசதியும், ரயில் நிலையத்தில் வாடகை கார் வசதி, ஹோட்டல் முன்பதிவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

தேஜஸ் ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் முறையும் உள்ளது. பயணிகளுக்கு ஒரு மணிநேரம் தாமதம் ஏற்பட்டால் 100 ரூபாயும், 2 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் 250 ரூபாயும் ஒவ்வொரு பயணிக்கும் வழங்கப்படும்.

பயணிகளிடம் காப்பீட்டுக்கென தனியாக கட்டணம் ஏதும் வசூலிக்காமல் ஒவ்வொரு பயணிக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, ரயிலில் கொள்ளை, திருட்டு நடந்தால் ரூ. ஒரு லட்சம் காப்பீடு உள்ளிட்ட வசதிகள் உள்ளன. ரயிலில் முன்பதிவு செய்து டிக்கெட்டை ரத்து செய்தால் குறைவான பிடித்தம் செய்தல் போன்ற வசதிகள் உள்ளன.

ரயலில் சொகுசு வசதிகளான இருக்கை முன் எல்சிடி தொலைக்காட்சி, படிக்கும் மின்விளக்குகள், செல்போன் சார்ஜ் வசதி, கண்காணிப்பு கேமிரா, காபி, தேநீர் வழங்கும் எந்திரம், விமானத்தில் வழங்கப்படுவதுபோல உயர்தர சுவையான காலை, மாலை சிற்றுண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

ஐஏஎன்எஸ்

SCROLL FOR NEXT