காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்: கோப்புப்படம் 
இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த 30-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளியே சென்று சாட்சியங்களைக் கலைத்து விட வாய்ப்புள்ளது என்று வாதிட்டது. ஆனால் சிதம்பரம் தரப்பிலோ எந்தவிதமான சாட்சியங்களையும் இதுவரை நான் கலைக்கவோ, தாக்கத்தை ஏற்படுத்தவோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "பிணை என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு. கைது செய்திருப்பதும், காவலில் வைத்திருப்பதும் தன்னை அவமானப்படுத்தும் நோக்கில் இருக்கிறது. நீதிமன்றக் காவலில் நீண்டகாலம் வைத்திருப்பதை தண்டனையாக அரசுத் தரப்பு நினைக்கிறது, நீண்டகாலம் நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது சரியானதா என்பதை ஆய்வு செய்து ஜாமீன் வழங்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

ப.சிதம்பரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்கக் கோரி நேற்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் என்.வி. ரமணா, சஞ்சீவ் கண்ணா, கிருஷ்ணா முராரி ஆகியோர் கொண்ட அமர்விடம் வலியுறுத்தினார். ஆனால், இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயிடம் அனுப்பப்படும். அவர் ஒதுக்கீடு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் சிதம்பரத்தின் ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

பிடிஐ

SCROLL FOR NEXT