புதுடெல்லி, பிடிஐ
ஹரியாணா தேர்தல் சீட் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடப்பதாக புதுடெல்லியில் சோனியா காந்தி இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய ஹரியாணா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் அனைத்துத் தேர்தல் கமிட்டிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆனாலும் சாதாரணக் கட்சித் தொண்டராகத் தான் தொடர்வதாக அவர் அறிவித்துள்ளார்.
ஹரியாணா காங்கிரஸ் கட்சி ஹூடா காங்கிரஸ் கட்சியாகிவிட்டது என்று சாடிய தன்வர், 5 ஆண்டுகளாக கட்சியை வலுப்படுத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, கட்சி நலன்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு தேர்தலில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
ஹரியாணாவில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சீட்டுகள் ஒதுக்குவதில் ஊழல் மிதமிஞ்சிவிட்டது என்று குற்றம் சாட்டி தன்வர் மற்றும் இவரது ஆதரவாளர்கள் சோனியா காந்தி இல்லத்தின் முன் போராட்டம் நடத்தினர்.
சீட்டுகள் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் கட்சித் தலைமையின் தலையீடு தேவை என்கிறார் தன்வர்.
பிரச்சாரத்திற்கே தேவைப்பட்டால், தன்னுடைய பிரச்சாரம் வேண்டும் என்று கேட்டால் மட்டுமே பரிசீலிப்பேன் என்று கூறிய தன்வர், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக தன்னுடைய ஆதரவாளர்கள் போட்டியிடும் வாய்ப்பையும் மறுக்கவில்லை, அது அவரவர் சொந்த விருப்பம் தான் அவர்கள் மீது செல்வாக்கு செலுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனால் ஹரியாணா காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு நிலவுகிறது.