இந்தியா

பொறியியல் படிப்புக்கு கீதை கட்டாயம் இல்லை: அமைச்சர் கே.பி.அன்பழகன்

என்.மகேஷ் குமார்

திருப்பதி

பொறியியல் படிக்கும் மாணவர்கள் பகவத் கீதையைக் கட்டாயம் படிக்க வேண்டிய அவசியமில்லை; விருப்பப் பாடமாக மட்டுமே தேர்வு செய்துகொள்ளலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

பின்னர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், ''அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் 32 பாடப்பிரிவுகளை புதிதாகக் கொண்டு வந்தது. இதில் 12 பாடப் பிரிவுகளை தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் பரிந்துரை செய்தது. அதில் ஒன்று பகவத்கீதை.

ஆனால், பெரும்பாலானோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பகவத் கீதை கட்டாயப் பாடமாக இல்லாமல், விருப்பப் பாடமாகத் தேர்வு செய்துகொள்ளும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு அரசு பரிந்துரை செய்துள்ளது'' என்றார் அமைச்சர் கே.பி. அன்பழகன்.

நீட் தேர்வு முறைகேடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்குப் பதிலளித்த அமைச்சர் அன்பழகன், ''நீட் தேர்வு முறைகேடு குறித்துத் தெரியவந்ததை அடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து இதுவரை தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது'' எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT