இந்தியா

டெல்லியில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்: பலத்த பாதுகாப்பு; 9 இடங்களில் போலீஸார் சோதனை

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாகவும் மிகப் பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கிடைத்த தகவல்களை அடுத்து தலைநகர் கடும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு டெல்லியில் பல இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

''தலைநகர் டெல்லியில் பண்டிகை காலத்திற்கு முன்னதாக, தாக்குதல் நடத்தத் தீவிரவாதிகள் தீட்டிய சதித் திட்டம் குறித்த தகவல்கள் உளவுத்துறைக்குக் கிடைத்துள்ளது. இதனை அடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறை சிறப்புப் பிரிவு டெல்லியில் 9 இடங்களில் சோதனை நடத்தியுள்ளது.

இந்தச் சோதனை டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் எனப்படும் டெல்லி உள்ளிட்ட சுற்று வட்டாரங்கள் அடங்கிய பகுதிகளில் நடத்தப்பட்டது.

இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறுகையில், ''ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.எம்) பயங்கரவாத அமைப்பிலிருந்து மூன்றிலிருந்து நான்கு பயங்கரவாதிகள் டெல்லி நகருக்குள் நுழைந்துள்ளதாகவும் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் சாத்தியம் உள்ளதால் இங்கு ஏ வகை அச்சுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லி போலீஸ சிறப்புப் பிரிவு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

உளவுத்துறையின் தகவல்கள் மிகவும் நம்பகமானதாகக் கருதப்படுவதால் தேடல்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.

பிடிஐ

SCROLL FOR NEXT