டெல்லியில் உள்ள மகாத்மா காந்திநினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், சோனியா காந்தி மரியாதை

செய்திப்பிரிவு

புதுடெல்லி

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு , காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி இன்று குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு இன்று பிற்பகலில் செல்ல உள்ளர்.

முன்னதாக இன்று காலை டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு வந்த பிரதமர் மோடி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலும் பங்கேற்ற பிரதமர் மோடி, கூட்டம் முடியும் வரை இருந்தார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " பாபுவுக்கு எனது அன்பார்ந்த அஞ்சலி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளில் மனிதகுலத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். அவரின் கனவுகளை நனவாக்கவும், இந்த பூமியை சிறந்ததாக மாற்றவும் நாங்கள் உறுதி ஏற்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வந்து சென்றபின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் காந்தியின் நினைவிடத்தில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் வந்திருந்து காந்தியின் நினைவிடத்தில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளில் பெருமதிப்புடன் நாம் மரியாதை செலுத்தி வருகிறோம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் காந்தியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மாற்றம் காண வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்திய காட்சி

லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்

முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள விஜய் காட் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி, லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.

லால்பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்தநாள் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் கூறிய பதிவிட்ட கருத்தில், " லால்பகதூர் சாஸ்திரியின் 115-வது பிறந்த நாளுக்கு எனது இதயத்தில் இருந்து அஞ்சலி செலுத்துகிறேன். இந்த தேசத்தை ’ஜெய் ஜவான், ஜெய் கிஷான்’ என்று முழக்கமிடச் செய்தவர்" எனத் தெரிவித்துள்ளார்

லால்பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் விஜய்காட் பகுதிக்கு வந்து மரியாதை செலுத்தினர்

பிடிஐ

SCROLL FOR NEXT