லக்னோ
உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்களை அடையாளம் காண மாநில காவல்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த மாதம் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி 19 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட உள்ளதாக வடகிழக்கு மாநிலங்களும் அறிவித்தன.
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதுபோலவே உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், தங்கள் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக வசிக்கும், வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை அடையாளம் காண மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, லக்னோ உள்ளிட்ட நகரங்களில், போக்குவரத்து மையங்கள், மாவட்ட புறநகர்களில் வசிக்கும் சந்தேகத்துக்குரிய நபர்களை விசாரிக்கவும், அவர்களது ஆவணங்களை சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு அம்மாநில காவல்துறை தலைவர் ஓ.பி.சிங், மாவட்ட காவல்துறை அதகிாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
உ.பி.யில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமாக வசிப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதனை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
கட்டுமான நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் அடையாளங்களை வைத்திருக்க வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள் முழு பொறுப்பேற்க வேண்டும்.
பிடிஐ
சட்டவிரோதமாக ஆவணங்கள் பெற உதவிய அரசு அலுவலர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் கைரேகை மற்றும் அடையாளங்களை பதிவு செய்ய வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இதனை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.