கொல்கத்தா
சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிபிஐ அமைப்பால் தேடப்பட்டு வந்த கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இன்று முன் ஜாமீன் வழங்கியது கொல்கத்தா உயர் நீதிமன்றம்.
மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை விசாரிக்க அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஆனால், விசாரணை முறையாக நடக்கவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ அமைப்புக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது மேற்கு வங்கத்தின் சிஐடி கூடுதல் இயக்குநராக ராஜீவ் குமார் இருந்து வருகிறார்.
இந்த வழக்கை விசாரித்த வந்தபோது ஏராளமான ஆவணங்களை அழித்துவிட்டதாகவும், ஆவணங்களை முறையாக ஒப்படைக்கவில்லை என்றும் சிபிஐ குற்றம் சாட்டி ராஜீவ் குமாரைக் கைது செய்ய முயன்றது.
ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து கைது செய்யத் தடை ஆணை பெற்று ராஜீவ் குமார் தப்பி வந்தார். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி கடந்த மாதம் 13-ம் தேதி ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அவரைக் கைது செய்யத் தடையில்லை என்று அறிவித்தது.
அதன்பின் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஆஜராகக் கோரி சிபிஐ அதிகாரிகள் பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அவரை பிடிக்க சிபிஐ தனிப்படை அமைத்தது. ஆனால், ராஜீவ் குமார் இருக்கும் விவரம் தெரியவில்லை.
இந்த சூழலில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மீண்டும் முன் ஜாமீன் கேட்டு போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஹிதுல்லா முன்ஷி, சுபாஷிஸ் தாஸ்குப்தா ஆகியோர் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. ராஜீவ் குமார் நேரடியாக ஆஜராகாமல் அவரின் வழக்கிறஞரும், சிபிஐ தரப்பில் வழக்கறிஞரும் ஆஜராகினார்கள். ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், ஜாமீன் வழங்கக் கூடியதுதான் என்று ராஜீவ் குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சஹிதுல்லா முன்ஷி, சுபாஷிஸ் தாஸ்குப்தா அமர்வு, " இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை. அதற்கான தகுதியான வழக்கும் இல்லை. ரூ.50 ஆயிரம் மதிப்பில் இரு உத்தரவாத பத்திரங்கள் அளித்து முன் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம். ராஜீவ் குமாரை விசாரணைக்கு சிபிஐ அழைக்கும் முன், 48 மணிநேரத்துக்கு முன் சம்மன் அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டனர்.
இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருக்கும் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமார் இனி எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரிந்துவிடும்.
, பிடிஐ