ரோதக்
ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
288 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 9-ம் தேதியுடனும், 90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 2-ம் தேதியுடனும் முடிகிறது. இதையடுத்து இரு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. வாக்குப்பதிவு அக்டோபர் 21-ம் தேதியும், 24-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும நடைபெறும். அக்டோபர் 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள், வேட்புமனு பரிசீலனை 5-ம் தேதியும், அக்டோபர் 7-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளாகும்.
இதையடுத்து ஹரியாணாவில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் பாஜக தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று ஆலோசித்தனர்.
இதைத்தொடர்ந்து ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக தலைமை இன்று வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னால் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் பரோடா தொகுதியிலும், ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் பேஹவா தொகுதியிலும், மற்றொரு மல்யுத்த வீரர் பாபிடா போகட் தாத்ரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 78 பேர் இடம் பெற்றுள்ளனர்.