மங்களூரு,
கர்நாடகாவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் தாய், சகோதரன் மற்றும் செல்ல நாய் ஆகியவற்றுடன் குதித்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை சகோதரனின் உடலைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் தொடரும் நிலையில் செல்ல நாய் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
''கடந்த சனிக்கிழமை கவிதா என்பவரின் கணவர் கிஷன் (65) இறந்தார். அவரது மரணத்தைத் தாங்கமுடியாத குடும்பத்தினர் அனைவரும் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர்.
நேற்று முன்தினம் காலமான கிஷனுக்கு நேற்று இறுதிச் சடங்கு நடைபெற வேண்டியது. ஆனால் அந்தத் துக்கத்தை தாங்க முடியாத அவரது குடும்பத்தினர் கிஷன் சடலம் அருகே 'மிஸ் யூ' என்ற குறிப்பை எழுதி வைத்துவிட்டு பனே மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றுப் பாலத்திற்குச் சென்றனர்.
இதில் கவிதா மந்தனா (55), அவரது மகன் கவுசிக் (30), மற்றும் மகள் கல்பித்தா (20) ஆகியோர் கூட்டாகத் தற்கொலை செய்துகொள்வதென முடிவுசெய்து தாங்கள் செல்லமாக வளர்த்த நாயுடன் சேர்ந்து அனைவரும் நேற்று இரவு ஆற்றில் குதித்தனர்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். இதில் கவிதா காப்பாற்றப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். கல்பிதாவின் உடல் திங்கள்கிழமை அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டது. மகன் கவுசிக்கைத் தொடர்ந்து தேடி வருகின்றனர். தற்போது உயிருடன் காப்பாற்றப்பட்ட செல்ல நாய் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தலைவர் இறந்தது தாங்காமல் குடும்பமே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.