லக்னோ,
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் பற்றி புகார் தெரிவித்து கைதான சட்டக் கல்லூரி மாணவிக்கு ஆதரவாக பாத யாத்திரை தொடங்க இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தா, அவரது ஆசிரமம் நடத்தும் சட்டக் கல்லூரியில் படித்த மாணவி அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் கடந்த செப்டம்பர் 20 அன்று கைது செய்யப்பட்டார். உடல்நிலை மோசமானதை அடுத்து, லக்னோ மருத்துவமனையில் சின்மயானந்தா சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக மாணவி மீது சின்மயானந்தா புகார் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அந்த மாணவி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்தது. இதைத் தொடர்ந்து மாணவி கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஒற்றுமையைக் காட்டவும், பாதிக்கப்பட்ட ஷாஜகான்பூர் மாணவிக்கு நீதி கேட்டும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர்கள் ஷாஜகான்பூரிலிருந்து லக்னோவுக்கு மூன்று நாள் பாத யாத்திரை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர். அதற்குள்ளாக இன்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்பிரச்சினை தொடர்பாக 80 காங்கிரஸ் தொண்டர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாத் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கட்சி எம்.எல்.ஏ அஜய் குமார் லல்லு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பிரசாத் கூறுகையில், "ஷாஜகான்பூர் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவரின் அவல நிலையை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் இன்று ஒரு அணிவகுப்பை நடத்த விரும்பியது. ஆனால் உள்ளூர் நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை. இது எப்படி சட்ட மீறல் அல்ல என்று சொல்லுங்கள்? இது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.