இந்தியா

குடியரசுத் தலைவரை சந்தித்த தோனி

செய்திப்பிரிவு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ராஞ்சியில் சந்திந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக தோனி ஓய்வுபெற்று இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஓய்வு பெறுவது தோனியின் விருப்பம் என்றும் அதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் யுவராஜ் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கவுதம் கம்பீரைப் போல் தோனியும் அரசியலில் இணையப் போகிறார் என்று செய்திகள் உலா வருகின்றன. இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் தோனி நேற்று இரவு சந்தித்தார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக ராஞ்சி சென்றுள்ளார்.

கனமழை காரணமாக கும்லா செல்லும் ராம்நாத் கோவிந்த் பயணம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜ்பவனில் தங்கியிருந்த குடியரசுத் தலைவரை கிரிக்கெட் வீரர் தோனி ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து விருந்தில் பங்கு கொண்டார்.

இந்தச் சந்திப்பில் இருவரும் எது குறித்துப் பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.

SCROLL FOR NEXT