பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று செல்ல உள்ள நிலையில், எல்லையோர கிராமங்களில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
ஜம்மு மாவட்டம் ஆர்.எஸ்.புரா மற்றும் தாவி பகுதிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள 5 இந்திய நிலைகள் மீது அதிகாலை 1.15 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக துப்பாக்கி, பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு நமது எல்லைப்படை வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே காலை 5.30 மணி வரை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் பிரேவா கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறும்போது, “இந்த விவகாரம் குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி அங்குள்ள வெளியுறவுத் துறை அதிகாரியிடம் கவலை தெரிவித்தார். இதுபோல, டெல்லியில் உள்ள பாகிஸ் தான் தூதரிடமும் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரி விக்கப்பட்டது” என்றனர்.
இந்த மாதத்தில் இதுவரை 9 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் பலியானதுடன், 2 பிஎஸ்எப் வீரர்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
ரஷ்யா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசினார். மேலும் முன்னாள் மாநில நிதி அமைச்சர் கிர்தரி லால் டோக்ராவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜம்மு நகருக்கு வர உள்ளார். இந்த நிலையில் பாகிஸ்தான் ராணு வம் தொடர்ந்து அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
ரஷ்யாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசினார். அப்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி செயல் படவே விரும்புகிறோம்.
ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப்போ தைய சூழ்நிலை முற்றிலும் மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை வேடிக்கை பார்க்க முடியாது. அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
கடந்த சில நாட்களாக இந்தியா மீது பாகிஸ்தான் அரசு அபாண்டமான குற்றச் சாட்டுகளை சுமத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படும் ஆளில்லா உளவு விமானம் சீனத் தயாரிப்பு ஆகும். அது இந்திய உளவு விமானம் அல்ல.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஹாட்லைன் தொலைபேசியில் இந்திய தரப்புடன் பேசியிருக்கலாம். தற்போதைய விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பாகிஸ்தான் தரப்புடன் இரண்டு முறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அதன் பிறகும் பாகிஸ் தான் ராணுவம் அத்துமீறு வதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.