கைதான பிரணவ் அன்சால், அன்சால் ஏபிஐ நிறுவனங்களின் அதிபர் 
இந்தியா

பண மோசடி; லண்டனுக்கு தப்பி ஓட முயன்ற தொழிலதிபர் டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டார்  

செய்திப்பிரிவு

புதுடெல்லி,

பல்வேறு பண மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் பிரணவ் அன்சால் இன்று காலை புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அன்சால் ஏபிஐ ரியல் எஸ்டேட் என்ற இந்தியாவின் பல மாநிலங்களிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுவரும் மிகப்பெரிய நிறுவனம் ஆகும். இதன் துணைத் தலைவராக இருப்பவர் பிரணவ் அன்சால். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. பணத்தை தவறாக பரிமாற்றம் செய்தது, வாடிக்கையாளர்களிடம் பணமோசடி போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி கூறியதாவது:

அன்சால் குழு மீது பல்வறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அன்சால் குழு நிறுவனங்கள் ஏழை மக்களை மட்டுமல்ல, துணை ராணுவப் படையினரையும் ஏமாற்றியுள்ளன.

பண மோசடிகளில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனங்களின் உரிமையாளரான பிரணவ்வுக்கு எதிராக 'தேடப்படும் குற்றவாளி' எனப்படும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

சமீப காலமாக போலீஸாரால் தேடேப்பட்டு வந்த குற்றஞ்சாட்டப்பட்ட இந்த நபர் இன்று லண்டனுக்கு பணத்துடன் தப்பி ஓட முயற்சித்த போது பிடிபட்டுள்ளார்.

இவ்வாறு மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இன்று டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள அன்சால் மீது கடந்த ஜூன் மாதம் ஜாமீனில் வெளிவராத கைது வாரண்ட்டை லக்னோ நீதிமன்றம் பிறப்பித்தது. நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல். போலி ஆவணங்கள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்மீது ஏற்கெனவே பதிவாகியுள்ளன.

-ஏஎன்ஐ

SCROLL FOR NEXT