புதுடெல்லி
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு, ஏதோ தெருமுனை பேச்சாளர்கள் பேசுகின்ற பேச்சுபோன்று இருந்தது, அந்நாட்டு ராணுவத்தின் நெருக்கடியை தாங்க முடியாமல் பேசியுள்ளார் என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் குறித்தும், இந்தியாவை கடுமையாக விமர்சித்தும் பேசினார். ஆனால் பிரதமர் மோடி, காஷ்மீர் குறித்தோ பாகிஸ்தான் குறித்த எந்தவித்திலும் பேசவில்லை, தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டு்ம் என்பதை மட்டும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், " தெருமுனை பேச்சாளர்கள் பேசும் பேச்சு எப்படி இருக்குமோ அதுபோன்றுதான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சு இருந்தது. அது மோசான பேச்சு, கேட்கவே பிடிக்கவில்லை, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்தவர்கள் மட்டுமே ரசித்தார்கள். ஐநா போன்ற மதிப்பு மிக்க அவையில், மற்றொரு நாட்டின் உள்நாட்டு அரசியல் குறித்து பேசக்கூடாது ஆனால், சர்வதேச பிரச்சினைகள் குறித்துப் பேசலாம்.
பாகிஸ்தானில் உள்ள படிக்காத மக்கள் வேண்டுமானால், இம்ரான் கான் பேச்சை ரசிக்கலாம், கைதட்டலாம். துணிச்சலான பேச்சு என பாராட்டலாம். பாகிஸ்தான் ராணுவத்தின் கடினமான அழுத்தத்தால் இம்ரான்கான் ஒருவேளை இப்படி பேசி இருக்கலாம்,.
ஆனால், பிரதமர் மோடி ஐ.நா.வில் பேசியது சிறப்பாக இருந்தது. இந்தியாவின் சாதனைகளையும், சர்வதேச விவகாரங்களையும் சுட்டிக்காட்டி அருமையாக பேசினார் " எனத் தெரிவித்தார்
, ஏஎன்ஐ