எர்ணாகுளம்
உச்ச நீதிமன்ற உத்தரவுபடி சர்ச்சைக்குரிய மராடு அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு குடியிருப்பவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8 -ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு இன்னும் கட்டிடத்தை இடிக்க இயலாத நிலையில் உள்ளது.
இதற்காக கடந்த செப்டம்பர் 23-ம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. மேலும் கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய ஒரு பகுதியில் கட்டுமானம் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் கேரளாவில் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டதாகவும் நீதிமன்றம் கூறியது.
இதையடுத்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்தது. இதற்கு அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மராடு அடுக்குமாடி குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராடு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் போராட்டத் தொடங்கியுள்ளனர். எர்ணாகுளத்தில் அவர்கள் இன்று உண்ணாவிரதப் பேராாட்டத்தை தொடங்கினர்.
இதுகுறித்து மராடு அடுக்குமாடி குடியிருப்பு சங்க தலைவர் சம்சுதீன் கூறுகையில் ‘‘நான்கு நாட்களுக்குள் நாங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இவ்வளவு குறைவான கால அவகாசத்தில் எங்களால் எப்படி வீடுகளை காலி செய்ய முடியும். இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளை ஏற்க முடியாது. எங்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை உண்ணா விரதப் போராட்டத்தை தொடருவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.