பாட்னா
பிஹாரில் கடந்து 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மகாராஷ்டிர, பிஹார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால், கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான அணைகளும் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. . மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பலத்த மழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித் தீர்த்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் நள்ளிரவில் ஒரே நேரத்தில் 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதேபோல் பிஹார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. பிஹார் தலைநகர் பாட்னாவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. பிஹார் மட்டுமின்றி மாநிலத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நாளந்தா மருத்துவ கல்லூரி மருத்துவனைக்குள்ளும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகினர்.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் விடாமல் மழை பெய்து வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலன இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்நதுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுபோலவே உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே பிஹார் மாநிலத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.