புதுடெல்லி
ஜம்மு காஷ்மீரில் எந்தவிதமான கெடுபிடியும் இல்லை, நாங்கள் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததையும், அரசியலமைப்பில் 370 பிரிவு திரும்பப் பெற்றதையும் உலகமே ஆதரிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்தோடு தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி கடந்த மாதம் 5-ம் தேதி எடுத்த துணிச்சலான முடிவால் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த தேசத்தில் வளர்ந்துவிட்ட பகுதியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம்தான் இருக்கபோகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது, அரசியலமைப்பில் 370 பிரிவை திரும்பப் பெற்றது ஆகிய முடிவுகளை உலகமே ஆதரிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்தவிதமான கெடுபிடியும் இல்லை.
ஆனால், ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன. என்ன விதமான கட்டுப்பாடுகள் அங்கு இருக்கின்றன. எல்லாம் உங்கள் மனதில்தான் இருக்கிறது.
காஷ்மீரில் உள்ள 196 போலீஸ் நிலையங்களில் கெடுபிடிகள், தடைகள் நீக்கப்பட்டுள்ளன, 8 போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே 144 தடை உத்தரவு நீடித்து வருகிறது. 5 பேர்வரை கூடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் முடிந்த ஐ.நா. மாநாட்டில் உலகத் தலைவர்கள் அனைவரும், காஷ்மீருக்கான 370 பிரிவை இந்தியா திரும்பப் பெற்றதை வரவேற்றார்கள். 7 நாட்கள் உலகத் தலைவர்கள் ஐநாவில் கூடியிருந்தார்கள், ஒரு தலைவர்கூட காஷ்மீர் பிரச்சினையை எழுப்பவில்லை. இது பிரதமர் மோடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் 41,800 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், தீவிரவாதத்தால் வீரர்கள் ஏராளமானோர் இறந்துள்ளார்கள், அவர்களின் விதவை மனைவிகள், குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளார்கள் இவற்றில் மனித உரிமை மீறல் எழவில்லையா.
மொபைல் நெட்வொர்க் இல்லை என்று பேசி புதிய பிரச்சினையை சிலர் கிளப்புகிறார்கள், மொபைல் நெட்வொர்க் இல்லாதது ஒன்றும் மனிதஉரிமை மீறல் அல்ல. அந்த மாநிலத்தில் 10 ஆயிரம் பதிய லேண்ட் லைன் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன, 600 தொலைபேசி பூத்கள் தொடங்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் விவகாரத்துக்காக ஐ.நா. செல்வது மிகப்பெரிய தவறு. அரசியலமைப்பு 370 பிரிவு நீண்டகாலமாக தவறாக ஊக்குவிக்கப்பட்டு வந்துள்ளது. ஐ.நா.வில் 35-வது பிரிவை நாடியிருப்பதற்கு பதிலாக, 51-து பிரிவை நாடி இருக்க வேண்டும்.
35-வது பிரிவுஎன்பது இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள், மோதலைக் குறிக்கும், ஆனால், 51-வது பிரிவு என்பது நம்முடைய நிலத்தை எதிரிநாடு ஆக்கிரமித்தலை குறிக்கும் அதில் முறையிட்டு இருந்தால், நமக்கு உதவியாக இருந்திருக்கும்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்
பிடிஐ