புதுடெல்லி
இளைஞர்கள் புதியவழியில் போதைக்கு அடிமையாவதை தடுக்கவே இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்த இ சிகெரட் மனிதர்களின் உடல்நலத்துக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக்கூடியது என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்தார்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில்(மனதோடு பேசுகிறேன்) வானொலி மூலம் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்றபின் 4-வது வாரமாக இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார். அவரின் பேச்சு வருமாறு
புகையிலை புகைத்தல், அடிமையாகுதல் உடல்நலத்துக்கு கேடு என்று நம் அனைவருக்கும் தெரியும. அந்த போதையில் இருந்து மீண்டு வெளிவருவது கடினம். புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய், நீரழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வரக்கூடும். புகையில் இருக்கும் நிகோடின் காரணமாகவே போதைக்கு அடிமையாகிறார்கள்.
புகையிலையின் ஆபத்து தெரியாமல் சிலநேரம் இளைஞர்கள் ஆர்வத்தின் காரணமாக அதை பயன்படுத்துகிறார்கள். அதிலும் இ-சிகரட் குடிப்பதால் எந்தவிதமான தீங்கும் இல்லை என்ற தவறான கருத்து இருந்தது.
ஆனால், அதிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஏராளமான வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்துவதால் உடலுக்கு மோசமான கேடு ஏற்படும். இளைஞர்கள் புதிய போதைக்கு அடிமையாவதை தடுக்கவே இ-சிகரெட் தடை செய்யப்பட்டது
தீபாவளிப் பண்டிகை கொண்டாடும்போது, ஏழை, எளியவர்களுக்கு இனிப்புகளையும், புத்தாடைகளையும் வழங்கி நம்முடைய மகிழ்ச்சியை தெரிவிக்க வேண்டும். தீபாவளிப் பண்டிகை என்பது இல்லத்துக்கு லட்சுமியை வரவழைப்பதை குறிக்கும். லட்சுமி வருவதன் மூலம் செழிப்பு, மகிழ்ச்சி கிடைக்கும்.
நம் வீடுகளில் பெண் குழந்தைகளை லட்சுமியாக கருதுவது நமது கலாச்சாரம். பெண் குழந்தை பெருமைப்படுத்தும் வகையில் கொண்டாட வேண்டும், இதற்காக சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஏராளமான மகள்கள், மருமகள்கள் சமூகத்தில் சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார்கள். ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கிறார்கள், சுகாதாரம், உடல்நலம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறார்கள். மருத்துவர்களாக, பொறியாளர்களாக, வழக்கறிஞர்களாக, நீதிபதிகளாக பெண்கள் சேவை செய்கிறார்கள். சமூகம் இதை அடையாளம் கண்டு மகள்களை கவுரவப்படுத்த வேண்டும்.
சமூகத்தில் சிறப்பான பணியாற்றிய பெண்கள் குறித்து பாரத்கிலட்சுமி ஹேஷ்டேக் பயன்படுத்தி அவர்களைப் பற்றி பதிவிடலாம். வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் நாம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க வேண்டும். ஒட்டுமொத்த உலகிற்கும் நாம் முன்னுதாரணமாக இருத்தல் வேண்டும்.
அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் எக்ஸாம் வாரியர்ஸ் புத்தகத்தின் 2-ம் பகுதியை ஒருவர் பெற்றோர், ஆசியர்கள் குறித்து எழுதுமாறு கோரியுள்ளார். பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை எனக்கு எழுதி அனுப்பலாம்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 23 வயதான ரஷிய டென்னிஸ் வீரர் டெனில் மெத்வதேவ் சிறப்பாக விளையாடினார்.
இறுதிப்போட்டியில் ஸ்பெயின் வீரர் நடாலிடம் போராடி தோல்வியுற்றாலும் அவரின் விளையாட்டுத் திறமையை பாராட்டுகிறேன். அவரின் விளையாட்டின் மூலம் மக்களின் இதயங்களை வென்றுவிட்டார்.
நாட்டில் பண்டிகைக்காலம் தொடங்கிவிட்டது, இன்று நவராத்திரி பண்டிகையும் தொடங்குகிறது, மக்கள் அனைவருக்கும் மகிழ்சியுடன் கொண்டாட வாழ்த்துகிறேன். இந்த பண்டிகை காலத்தில் மக்கள் அனைவரும் நாடுமுழுவதும் சுற்றுலா சென்று வாருங்கள்
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
பிடிஐ